சென்னை: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்து வெற்றி பெற்ற திரைப்படம் ‘நாயகன்’.1987-ம்ஆண்டு வெளியான இந்தப் படத்துக்கு இளையராஜா இசையமைத்திருந்தார். பி.சி.ஸ்ரீராம் ஒளிப்பதிவு செய்திருந்தார். சரண்யா இந்தப் படத்தில்தான் கதாநாயகியாக அறிமுகமானார். ஜனகராஜ், டெல்லி கணேஷ், நாசர், நிழல்கள் ரவி உட்பட பலர் நடித்திருந்தனர்.
மும்பையைப் பின்னணியாகக் கொண்ட இந்தப் படத்தில் வேலு நாயக்கர் என்ற கதாபாத்திரத்தில் கமல் நடித்துள்ளார். இந்தப் படத்துக்காக கமல்ஹாசனுக்குச் சிறந்த நடிகருக்கான தேசிய விருது கிடைத்தது. ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம், கலை இயக்குநர் தோட்டா தரணிக்கும் தேசிய விருது கிடைத்தது. இந்நிலையில் இந்தப் படம் நவ. 3-ம் தேதி டிஜிட்டலில் மீண்டும் வெளியாகிறது.
படத்தை வெளியிடும் மதுராஜ் கூறும்போது, “பிலிமில் எடுக்கப்பட்ட ‘நாயகன்’ படத்தை டிஜிட்டல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாற்றியுள்ளோம். எஸ்.ஆர்.பிலிம் பேக்டரியிடமிருந்து வாங்கி ஏடிஎம் புரொடக் ஷன்ஸ் மூலம் தமிழ்நாட்டில் 120 திரையரங்குகளிலும் கேரளாவில் 60 திரையரங்குகளிலும் கர்நாடகாவில் 50 திரையரங்குகளிலும் வெளியிடுகிறோம்” என்றார்.