சுந்தர் ராவ் நட்கர்னி, இயக்கிய இந்தப்படத்துக்கு இளங்கோவன் வசனம் எழுதினார். எம்.கே.தியாகராஜ பாகவதர், டி.ஆர்.ராஜகுமாரி, என்.சி.வசந்தகோகிலம், என்.எஸ்.கிருஷ்ணன், டி.ஏ. மதுரம் உட்பட பலர் நடித்தனர். கோவை சென்ட்ரல்ஸ்டூடியோவில் உருவான இந்தப் படத்தில்தான் பண்டரிபாய் அறிமுகமானார். பாபநாசம் சிவன் பாடல்கள் எழுதி இசைஅமைத்தார். ஜி.ராமநாதன் ‘ஆர்கேஸ்ட்ரேஷனை’ அமைத்திருந்தார். மொத்தம் 20 பாடல்கள். இதில் 13 பாடல்களை பாகவதரே பாடியிருந்தார். அனைத்தும் வரவேற்பைப் பெற்றன.
‘வாழ்விலோர் திருநாள்’ என்றுபாடியபடியே குதிரையில் பாகவதர் வரும் முதல் காட்சியே ரசிகர்களின் கைத்தட்டலைப் பெற்றது. ‘மன்மதலீலையை வென்றார் உண்டோ’ அந்தக் காலகட்ட இளைஞர்களைப் பைத்தியமாக்கியது. பாகவதரின் குரலுக்குள் ரசிகர்கள் விழுந்து கிடந்தார்கள். ‘எனது மனம் துள்ளி விளையாடுதே’, ‘கிருஷ்ணா முகுந்தா’ உட்பட அனைத்துப் பாடல்களும் ஹிட்டாயின.
நல்லவராகவே நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்த பாகவதர், இதில் முதல் பாதியில் பெண் பித்துப் பிடித்தவராகவும் மதுவுக்கு அடிமையாகிப் பெற்றோரை வெறுப்பவராகவும் நடித்திருப்பார். இரண்டாம் பாதியில் முனிவரின் சாபத்தால் கால்களை இழந்து பெற்றோரைச் சரணடைவதாக நடித்திருப்பார். தமிழ் சினிமாவின் முதல் கனவு கன்னியாகத் திகழ்ந்த டி.ஆர்.ராஜகுமாரி, அப்போது நெகட்டிவ் கேரக்டரில் கவர்ச்சியாக நடித்து வந்தார். இதிலும் அப்படியே. தாசி ரம்பாவாக நடித்திருப்பார்.
சென்னை பிராட்வே திரையரங்கில் தீபாவளிக்கு வெளியான இந்தப் படம் மூன்று தீபாவளிக்குத் தொடர்ந்து ஓடி சாதனைப் படைத்தது. மொத்தம் 768 நாட்கள் ஓடி மிரட்டியது. திரையரங்குகள் திருவிழா கொண்டாட்டத்தைக் கண்டன. கச்சா ஃபிலிமுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால், 11 ஆயிரம் அடிக்குள்தான் படம்தயாரிக்க வேண்டும் என்று அரசு அப்போது கட்டுப்பாடு விதித்ததால், 11 ஆயிரம் அடியில் தயாரிக்கப்பட்ட படம் இது. 1944-ம் ஆண்டு இதே நாளில்தான் இந்தச் சாதனைப் படம் வெளியானது.