‘நிலவே மலரே’படம் மூலம் தமிழில் அறிமுகமான நடிகர் ரஹ்மான், சினிமாவில் 40-வது வருடத்தைத் தொடுகிறார். மலையாளத்தில் அவர் அறிமுகமான கூடெவிடே (Koodevide)வெளியாகி வரும் 21-ம் தேதியுடன் 40 வருடமாகிறது. மலையாளம், தமிழ், தெலுங்கு என நடித்து வரும் அவர், இப்போது இந்திக்கும் சென்றிருக்கிறார். அமிதாப் பச்சன், டைகர் ஷெராப், கீர்த்தி சனோன் நடிப்பில் வரும் 20-ம் தேதி வெளிவர இருக்கும் ‘கண்பத்’ படத்தில் ரஹ்மானுக்கும் முக்கிய வேடம்.
எப்படி கிடைச்சது இந்தி வாய்ப்பு?
தமிழ்ல, ‘நிலவே மலரே’ படம் ஹிட்டானதும், அந்தப் படத்தோட இந்தி ரீமேக்கில் நடிக்க என்னை கேட்டாங்க. அப்ப மற்ற படங்கள்ல பிசியானதால இந்திக்குப் போக முடியலை. அடுத்தும் நிறைய வாய்ப்புகள் வந்தது. ஒர்க் வுட் ஆகலை. இப்ப, இந்தி இயக்குநர் விகாஸ் பால் கூப்பிட்டார். ‘குயின்’ மாதிரியான படங்களை இயக்கியவர் அவர். கதை சொன்னார். நல்லா இருந்தது. எனக்கு ஆழமான கேரக்டர். நான் சின்ன வயசுல இருந்தே ரசிச்ச, பிரமிச்ச நடிகர் அமிதாப் பச்சனுக்கு மகனா நீங்க நடிக்கிறீங்கன்னு சொன்னதும் உடனே ஓகே சொல்லிட்டேன்.
இதுல நீங்க மார்ஷியல் ஆர்ட்ஸ்குருவா நடிச்சிருக்கீங்களாமே?
ஆமா. இந்த படத்தோடகதை 2075-ல நடப்பதுமாதிரி உருவாக்கப்பட்டிருக்கு. அந்த காலகட்டத்துல ஒரு புது உலகம் எப்படி இருக்கும் அப்படிங்கறதை இந்தப்படத்துல காட்டியிருக்காங்க. இதுல சிவாங்கறகேரக்டர்ல, மார்ஷியல் ஆர்ட்ஸ் குருவா நடிச்சிருக்கேன். படத்தோட ஹீரோ, டைகர் ஷெராபுக்கு நான் சண்டைகளை கற்றுக் கொடுக்கிறேன். அவர் நிஜமாகவே மார்ஷியல் ஆர்ட்ஸ் தெரிஞ்சவர். அவருக்கும் எனக்குமே படத்துல ஃபைட் இருக்கு. அவர் ஆக்ஷன் அட்டகாசமா பண்ணுவார்ங்கறதால, ரொம்பவேகமா நடிப்பார். ‘ஸ்பைடர்மேன்’ மாதிரி அங்க இங்கன்னுகுதிச்சு ஃபைட் பண்ணுவார். நான் மாஸ்டர்னா, அவருக்கு மேல இருக்கணும். அவருக்கு சமமா நான்ஃபைட் பண்ணணும். இந்தக் காட்சியை லடாக்ல எடுத்தாங்க. பனி நிறைஞ்ச பிரதேசத்துல, பல ஆயிரம் அடி உயரத்துல இந்தச் சண்டைக் காட்சியை படமாக்கினாங்க. ஆக்ஸிஜன் பற்றாக்குறையால மூச்சுவிட முடியாம திணறிய அனுபவங்களும் கிடைச்சது.
அமிதாப்பச்சனோட நடிச்ச அனுபவம்?
சினிமாவுல எல்லாருமே அமிதாப்பச்சன் ரசிகர்களாகத்தான் இருப்பாங்க. அதனால ஷூட்டிங் ஸ்பாட்ல அவர்ட்ட போயி, ‘நான்உங்களோட தீவிர ரசிகன்’ன்னு சொல்லி அவரை சங்கடப்படுத்த விரும்பலை. ஆனா, அவர் என்னைப் பற்றி சிலவிஷயங்களை தெரிஞ்சு வச்சிருந்தார். குறிப்பா தொண்ணூறுகள்ல நான் நடிச்ச ‘குற்றப்பத்திரிகை’ படம் வெளியாவதுல சிக்கல் ஏற்பட்டது பற்றி என்கிட்ட கேட்டார். அந்த படம் ரிலீஸ் ஆயிடுச்சான்னு விசாரிச்சார். எனக்கு சிவாஜி கணேசன், நாகேஷ், நசீர், மது போன்ற ஜாம்பவான்களோட நடிக்கும் பாக்கியம் ஏற்கெனவே அமைஞ்சது. அந்த வரிசையில இப்போ அமிதாப் பச்சனோடவும் நடிச்சுட்டேன்.
தென்னிந்திய கலைஞர்களுக்கு பாலிவுட்ல வரவேற்பு எப்படியிருக்கு?
அங்க, நம்ம கலைஞர்கள் மேல மிகப்பெரிய மரியாதைவச்சிருக்காங்க. இங்கே என்ன நடக்குது, என்ன படம் வெளியாகுதுன்னு எல்லாமே தெரிஞ்சு வச்சிருக்காங்க. ‘கண்பத்’ ஷூட்டிங் முடிஞ்சு ஒரு நாள் கார்ல போயிட்டு இருக்கும்போது, அந்த டிரைவர் இந்தியில சொன்னார், ‘சார், சிங்கம் 2, துருவங்கள் பதினாறு படங்கள்ல நீங்க நல்லா நடிச்சிருந்தீங்க’ன்னு. அப்பதான் டப்பிங் படங்களோட வீச்சு பற்றி தெரிஞ்சுகிட்டேன்.
நீங்க தமிழ்ல நடிக்கத் தொடங்கிய காலத்துல சிறந்த டான்சர்னு சொல்வாங்க...
ஆனா, நடனம் பற்றி எனக்கு அப்ப ஒண்ணுமே தெரியாது. மலையாளத்துல ஐவி சசி இயக்கிய ‘காணாமறயத்து’ படம்தான் அதுக்கு காரணம். அடுத்து தமிழ்ல ‘கண்ணே கனியமுதே’. இந்தப் படத்து ஷூட்டிங் போன பிறகுதான், பரதநாட்டிய மாணவிகளுக்கு நடனம் கற்றுக் கொடுக்கும் குருவாக நடிக்கப் போறேன்னு எனக்குத் தெரியவந்தது. மொத்த படக்குழுவும் எனக்குப் பரதம் தெரியும்னே நம்பியிருந்தாங்க.
என் மாணவிகளா நடிக்கிறவங்க எல்லாருமே கலாசேத்ரா மாணவிகள்னு சொன்னாங்க. பிறகு நடன இயக்குநர்கிட்ட நடனம் தெரியாதுங்கற விஷயத்தை விளக்கி, முதல் நாள் இரவு ரிகர்சல் பண்ணிட்டு மறுநாள் படப்பிடிப்புல நடிச்சு சமாளிச்சேன். ஆனா, ஒரு வருஷத்துக்கு முன்னாலயே நடனம் கத்துக்கிட்டுதான் ‘சங்கமம்’ படத்துல நடிச்சேன். அந்தப் படமும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையும் பாடல்களும் எனக்குப் பெரிய இடத்தைக் கொடுத்தது.
அடுத்து என்ன படங்கள் பண்றீங்க?
கார்த்திக் நரேன் இயக்கத்துல ‘நிறங்கள் மூன்று’ படத்துல நடிச்சிருக்கேன். இந்த படத்துல எனக்குப் பிடிக்காத அதே நேரம் பாசிட்டிவான ஒரு கதாபாத்திரத்துல நடிச்சிருக்கேன். நிஜத்துல நான் அப்படி இருக்க விரும்ப மாட்டேன். எந்த ஹீரோவும் இப்படியொரு கேரக்டர்ல நடிக்கத் தயங்குவாங்க. அடுத்து துப்பறிவாளன் 2, ஜனகணமன படங்களும் இருக்கு. நீட் தேர்வை எதிர்த்து உருவாகியுள்ள ‘அஞ்சாமை’ படத்துல நீதிக்காக போராடுற போலீஸ் அதிகாரியாக நடிச்சிருக்கேன். இது தவிர ‘1000 பிளஸ் பேபீஸ்’ங்கற வெப் சீரிஸ்ல நடிக்கிறேன். சுமார் ரூ.18 கோடி செலவுல ஹாட் ஸ்டாருக்காக இந்த வெப்தொடர் உருவாகி வருது.