தமிழ்த் திரையுலகில் முன்னணி தயாரிப்பாளர்கள் 6 பேர் இணைந்து, 'கனவுத் தொழிற்சாலை' எனப் பொருள்படும் 'ட்ரீம் ஃபேக்டரி' என்ற பெயரில் திரைப்பட விநியோக நிறுவனம் ஒன்றைத் தொடங்கி இருக்கிறார்கள்.
தமிழ் சினிமாவில் தற்போது படம் தயாரிப்பது என்பது மிகவும் எளிது, ஆனால் தயாரித்த படத்தை வெளியிடுவது என்பது மிகப்பெரிய கஷ்டம். பல சமயங்களில் படத்திற்கு ஆன தயாரிப்பு செலவைவிட, படத்தை வெளியிட முடியாமல் கட்டிய வட்டி அதிகமாக இருந்திருக்கிறது.
இவ்வாறு பல தயாரிப்பாளர்கள் கஷ்டப்படுவதால், முன்னணி தயாரிப்பாளர்களான 'ஸ்டூடியோ க்ரீன்' ஞானவேல் ராஜா, 'திருக்குமரன் எண்டர்டெயின்மெண்ட்' சி.வி.குமார், 'ஆர்.எஸ்.இன்ஃபோடெயின்மென்ட்' எல்ரெட் குமார், 'ஒய் நாட் ஸ்டூடியோஸ்' சசிகாந்த், 'அபி & அபி பிக்சர்ஸ்' அபினேஷ் இளங்கோவன், 'பிரின்ஸ் பிக்சர்ஸ்' லஷ்மன் குமார் ஆகிய 6 பேர் இணைந்து 'ட்ரீம் ஃபேக்டரி' என்ற பெயரில் புதிய நிறுவனம் ஒன்றைத் தொடங்கியுள்ளார்கள்.
இதன் மூலம், தரமான புதிய தமிழ்த் திரைப்படங்களை வாங்கி, விநியோகம் செய்ய இருக்கிறார்கள். விநியோகம் செய்வது மட்டுமன்றி படத்திற்கான விளம்பர வேலைகளையும் செய்யலாம் என்று தீர்மானித்திருக்கிறார்கள்.
முதற்கட்டமாக, 'ட்ரீம் ஃபேக்டரி' நிறுவனம் மூலம் 'சரபம்', 'மெட்ராஸ்', 'யான்', 'காவியத்தலைவன்', 'லுசியா' தமிழ் ரீமேக் ஆகிய படங்களை வெளியிட தீர்மானித்திருக்கிறார்கள்.
தமிழ்த் திரையுலகில் முதன்முறையாக 6 தயாரிப்பாளர்கள் இணைந்து, படங்களை வாங்கி வெளியிடும் நிறுவனம் ஆரம்பித்திருப்பதால், குறைந்த பட்ஜெட்டில் தரமான படைப்புகளை வெளியிடுவதற்கான நல்லச் சூழ்நிலை உருவாகியுள்ளது.