ரஜினிகாந்த் பூரண உடல்நலத்துடன் இருப்பதாக இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.
ரஜினி, சோனாக்ஷி சின்கா, அனுஷ்கா, சந்தானம், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடிக்கும் 'லிங்கா' படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் சண்டைக் காட்சிகள் படப்ப்பிடிப்பின் போது ரஜினி மயங்கி விழுந்துவிட்டதாகவும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் செய்திகள் வெளியானது.
இச்செய்திக்கு 'லிங்கா' இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் மறுப்பு தெரிவித்துள்ளார். "இன்று காலை முதல் ரஜினிகாந்திற்கு 'லிங்கா' படப்பிடிப்பின் போது உடல்நிலை சரியில்லை என்று செய்திகள் வெளியாகி இருக்கிறது. அச்செய்தியில் உண்மையில்லை.
ரஜினிகாந்த் பூரண உடல்நலத்துடன் உள்ளார். 'லிங்கா' படப்பிடிப்பில் மிகவும் உற்சாகமாக கலந்து கொண்டு நடித்து வரும் ரஜினியைப் பற்றி வந்துள்ள செய்தி தவறு" என்று தனது அதிகாரப்பூர்வ ஃபேஸ்புக் பக்கத்தில் கே.எஸ்.ரவிக்குமார் தெரிவித்திருக்கிறார்.