பிரசன்னா, சினேகா நடித்த ‘அச்சமுண்டு அச்சமுண்டு’, மோகன்லால் நடித்த ‘பெருச்சாழி’ , அர்ஜுன் நடித்த ‘நிபுணன்’ படங்களை இயக்கிய அருண் வைத்தியநாதன், ‘சாட் பூட் த்ரி’ என்ற குழந்தைகளுக்கானப் படத்தை இயக்கி இருக்கிறார். வரும் 6-ம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படம் பற்றி அவரிடம் பேசினோம்.
திடீர்னு ஏன் குழந்தைகளுக்கான படம்?
கோவிட் காலகட்டத்துலதான், குழந்தைகளுக்குன்னு தமிழ்ல அதிக படங்கள் இல்லைன்னு தோணுச்சு. அவங்களுக்கான வாழ்க்கையை அவங்க உலகத்தைச் சொல்ற மாதிரியான ஒரு படம் பண்ணணும்னு அப்பதான் நினைச்சேன். பொதுவா பெரும்பாலான பெரிய இயக்குநர்கள் எல்லோருமே குழந்தைகளுக்கான படம் பண்ணியிருக்காங்க. எனக்கும் அப்படி பண்ணணும்னு தோணுச்சு. அதனால உருவான படம்தான் இது. இயக்குநரா இல்லாம குழந்தைகளின் தந்தையா எனக்கு மன நிறைவைக் கொடுத்திருக்கிற படம்.
என்ன மாதிரியான கதையை சொல்றீங்க?
பொதுவா குழந்தைகளுக்கான உலகம் வேறதானே. அவங்க வாழ்க்கையை, அவங்க ஸ்டைல்ல சொல்ற படம் இது. நான்கு பசங்க. அதில் ஒருத்தன், நாய் வளர்க்கிறான். அந்த நாய், ஒருநாள் காணாமல் போயிடுது. அதைத் தாங்க முடியலை. வீட்டுல சொல்லாம அந்த 4 பேரும் அதைத் தேடிப் போறாங்க. அந்த தேடல்ல அவங்கக் கத்துக்கிட்டது என்ன? என்பதுதான் படம். ஒரு துண்டு சீட்டுல எழுதிடற கதைதான். ஆனா, திரைக்கதை வேற மாதிரி இருக்கும். இதுல, குழந்தை நட்சத்திரங்கள் கைலாஷ், பிரணதி, பூவையார், வேதாந்த்... இவங்க தவிர யோகிபாபுவும் பண்ணியிருக்கார்.
திரைப்பட விழாக்களுக்கு படத்தை அனுப்பி இருந்தீங்களே?
ஆமா. இது குழந்தைகளை வச்சு குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட படம். ஆனா பெரியவங்களும் பார்க்கலாம். படம் பார்த்த சிலபிரபலங்கள் ரொம்ப நெகிழ்ச்சியா பாராட்டியிருக்காங்க. இது சென்னையில நடக்கிற கதை. நிறைய படவிழாக்கள்ல இந்தப் படத்துக்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்திருக்கு. 11 விருதுகளை வாங்கியிருக்கு. அது எங்களுக்கு பெரிய நம்பிக்கையையும், மகிழ்ச்சியையும் தந்திருக்கு.
சினேகா, வெங்கட் பிரபு பற்றி..?
சினேகாகிட்ட ஒரு நண்பரா கதையை கேளுங்கங்கன்னு சொன்னேன். அவங்க நான் நடிக்கப் போறதில்லை, ஏன் கேட்கணும்னு சொன்னாங்க. சும்மா கேளுங்கன்னு அவங்களை வற்புறுத்தி கதையைச் சொன்னேன். ஒரு 20 பக்கம் கதையை வாசிச்சேன். அவ்வளவுதான் கேட்டுட்டு, போதும் இதுல நடிக்கிறேன்னு சொல்லிட்டாங்க. சிறப்பான கேரக்டர் பண்ணியிருக்காங்க. அதே போல ஜாலியான ஒரு அப்பா கேரக்டர்னு சொன்ன உடனேயே உதவி இயக்குநர்கள் சொன்ன பெயர் வெங்கட் பிரபு. இவங்க ரெண்டு பேரும் நல்லா நடிச்சிருக்காங்க. நானும் ஒரு கேரக்டர்ல நடிச்சிருக்கேன்.
வீணை ராஜேஷ் வைத்யாவை இசை அமைப்பாளர் ஆக்கியிருக்கீங்க...
ஆமா. அவர் எப்பவும் சினிமா பற்றி பேசிட்டு இருப்பார். நாங்களும் அடிக்கடி பேசுவோம். நீங்க ஏன் சினிமாவுல இசை அமைக்கக் கூடாதுன்னு ஒருமுறை கேட்டேன். நீங்க ஏன் எனக்கு வாய்ப்புக் கொடுக்கக் கூடாது?ன்னு சொன்னார். இந்தப் படத்துலயே பண்ணுங்கன்னு சொல்லிட்டேன். படத்துல ரெண்டு பாடல்கள்தான். பின்னணி இசையையும் மிரட்டலா பண்ணியிருக்கார்.
மேனகா காந்தி இந்தப் படத்தைப் பாராட்டீனாங்களாமே?
விலங்குகள் நல மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர் மேனகா காந்தி, சமீபத்துல இந்தப் படத்தைப் பார்த்தாங்க. குழந்தைகளுக்கான மிகச்சிறந்த படம் இதுன்னு சொன்னாங்க. குழந்தைங்க, பெரியவங்க, விலங்கு நல ஆர்வலர்கள்னு எல்லாரும் கட்டாயம் பார்க்கணும்’னு அவங்க சொன்னது ரொம்ப மகிழ்ச்சியா இருந்தது.