சென்னை: வங்கி கணக்கு முடக்கத்தை எதிர்த்து நடிகர் ஆர்.கே.சுரேஷ் தொடர்ந்த வழக்கில், தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தை நாட சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஆருத்ரா கோல்டு மோசடி விவகாரத்தில் பாஜக நிர்வாகியும், நடிகருமான ஆர்.கே. சுரேஷுக்கு தொடர்பு இருப்பதாக புகார் எழுந்தது. இது தொடர்பான விசாரணைக்கு ஆஜராகுமாறு அவருக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸார் சம்மன் அனுப்பினர். இந்நிலையில், ஆர்.கே.சுரேஷுக்கு சொந்தமான வங்கி கணக்கு முடக்கப்பட்டது. இதனை எதிர்த்து ஆர்.கே.சுரேஷ் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
மனு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது ஆர்.கே.சுரேஷ் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் எஸ்.வீரராகவன், ஆரூத்ரா மோசடி விவகாரத்துக்கும் மனுதாரருக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.மேலும், மனுதாரரின் வங்கி கணக்கு முடக்கப்பட்டுள்ளதால் மிகுந்த சிரமத்துக்கு ஆளாகியுள்ளார் என்று தெரிவித்தார்.
அப்போது காவல்துறை சார்பில் ஆஜரான கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் தாமோதரன், ஆர்.கே.சுரேஷின் வங்கி கணக்கு முடக்கம் தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுவிட்டது என்று குறிப்பிட்டார்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, வங்கி கணக்கு முடக்கம் தொடர்பாக தமிழ்நாடு முதலீட்டாளர்கள் பாதுகாப்பு சட்ட சிறப்பு நீதிமன்றத்தை நாட ஆர்.கே.சுரேஷுக்கு உத்தரவிட்ட நீதிபதி வழக்கை முடித்து வைத்தார்.