அருவி இயக்குநர் அருண்பிரபு மற்றும் நாயகி அதிதி பாலனை நேரில் அழைத்து தங்கச்சங்கிலியை பரிசாக அளித்துள்ளார்.
அருவி திரைப்படத்தை பார்த்துவிட்டு நடிகர் ரஜினிகாந்த் இயக்குநர் அருண்பிரபுவை தொலைபேசியில் அழைத்து ஏற்கெனவே பாராட்டியிருந்தார்.
இந்நிலையில், தற்போது இயக்குநர் அருண்பிரபு மற்றும் நாயகி அதிதி பாலனை நேரில் அழைத்து சிறந்த படைப்பை தந்ததற்காக இருவருக்கும் தங்கச் சங்கிலியைப் பரிசாக அளித்துள்ளார் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்.
அருவி படத்தின் தயாரிப்பாளர் ட்ரீம் வாரியார் பிக்சர்ஸ் S.R.பிரபுவையும் வாழ்த்திய ரஜினிகாந்த். அவர் என்ன படங்களையெல்லாம் தயாரித்துள்ளார் என்பதைக் கேட்டுள்ளார். அவர் தேசிய விருது பெற்ற ஜோக்கர் மற்றும் மாநகரம் , தீரன் அதிகாரம் ஒன்று போன்ற படங்களை தயாரித்துள்ளேன் என்று பதிலளித்த போது. நீங்கள் தயாரித்த எல்லாப் படங்களையும் நான் பார்த்துவிட்டேன். எல்லா படங்களும் தரமான படங்கள். இதை போன்ற படங்களை தொடர்ந்து தயாரியுங்கள் என்று கூறியுள்ளார்.
இயக்குநர் அருண்பிரபுவிடம் ரஜினிகாந்த் பேசும்போது, "அருவி ரொம்ப அறிவுபூர்வமான படம் , சிறந்த படம் , படத்தைப் பார்த்து நான் அழுதேன், நிறைய சிரிக்கவும் செய்தேன். நான் தனியாக படத்தைப் பார்க்கும் போதும்கூட திரையரங்கில் படத்தைப் பார்த்த உணர்வு கிடைச்சுது. மிகப்பெரிய படைப்பு. இந்தப் படத்தை அனைவரும் பார்க்க வேண்டும். இந்தப் படத்தை கொடுத்ததற்காக எங்களைப் போன்ற மக்கள் உங்களுக்கு கண்டிப்பாக நன்றி சொல்ல வேண்டும்" என்று இயக்குநரை பாராட்டினார்.
மேலும், "இந்த கதையை எங்க இருந்து ஆரம்பிச்சிங்க என்றும் கேட்டுள்ளார்?"
அருவி திரைப்படத்தில் இடம்பெற்ற பிரபல வார்த்தையான "Rolling sir" என்ற வார்த்தை மூன்று முறை படத்தில் வருவது போல் சத்தமாக கூறி மகிழ்ந்துள்ளார்.
அருவி திரைப்படத்தின் நாயகி அதிதியிடம், "உங்க நடிப்பு சூப்பர்… எவ்வளவு வெயிட் லாஸ் பண்ணீங்க" என்று கேட்டு பாராட்டியுள்ளார்.
இறுதியில் உங்களைப் போன்ற ஆட்கள் கண்டிப்பாக நிறைய நாள் சினிமாவில் இருக்க வேண்டும். படத்துக்கு பொங்கல் வரைக்கும் பப்ளிசிட்டி பண்ணுங்கள் என்று கூறியும் வாழ்த்தியுள்ளார்.