“ஜெய்பீம் படத்துக்கு விருது கிடைக்காதது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது” என இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், “கடைசி விவசாயி படத்துக்கு தேசிய விருது கிடைத்துள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. அற்புதமான திரைப்படம். இயக்குநர் மணிகண்டனுக்கு வாழ்த்துகள். நீண்ட நாட்களாக கடின உழைப்பு செலுத்தி வரும் ஸ்ரீகாந்த் தேவாவுக்கு ‘கருவறை’ படத்துக்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கும் வாழ்த்துகள்.
‘ஜெய்பீம்’ படத்துக்கு விருது கிடைக்காதது எனக்கு மிகுந்த ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஏன் என்ற ஆயிரம் கேள்விகள் எழுந்துள்ளது. தமிழ் சினிமாவுக்கு 5 தேசிய விருதுகள் கிடைத்தது மகிழ்ச்சி” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக ஒளிப்பதிவாளர் பிசிஸ்ரீராம், அசோக் செல்வன், நானி உள்ளிட்ட திரையுலகைச் சேர்ந்த பலரும் ‘ஜெய்பீம்’ படத்துக்கு விருது கிடைக்காமல் போனதற்கு அதிருப்தி தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.