எண்பதுகளில் காதல் படங்களுக்கு என்று தனி ரசிகர் கூட்டம் உண்டு. சொல்லி வைத்த மாதிரி அந்தப் படங்களின் பாடல்கள் கண்டிப்பாக ஹிட்டாகிவிடும். பாடல்களின் மயக்கத்திலேயே ரசிகர்கள் அந்தப் படங்களுக்குப் படையெடுத்த காலம் அது. இதற்கு பல படங்களை உதாரணமாகச் சொல்ல முடியும். அப்படி ஒரு படம்தான் ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய ‘குங்குமச் சிமிழ்’!
தலைப்பிலேயே வசீகரம் தந்த இந்தப் படத்தின் கதை இதுதான்: கோவையில் இருந்து சென்னைக்கு வேலை தேடி வரும் மோகன், டிக்கெட் எடுக்க பணமின்றி பஸ்சில் ஏறும் இளவரசிக்கு உதவுகிறார். இருவரும் சென்னையில் கூட்ஸ் வண்டியில் தங்குகிறார்கள். வேலையில்லாததால் வறுமை.
அந்த வறுமை அவர்களுக்குள் காதலை கொண்டு வருகிறது. ஒருகட்டத்தில், முன் பணம் கட்டினால் வேலை கிடைக்கும் என்ற நிலை. இதனால் மோகனுக்கு பாரமாக இருக்கக் கூடாது என்று பிரிந்து செல்கிறார் இளவரசி.
பஸ்சில் வரும் மோகனுக்கு ஒரு கவரில் ரூ.12,500 கிடைக்கிறது. அதைக் கொண்டு, டெபாசிட் கட்டி, முதுமலையில் வேலைக்குச் சேருகிறார். அங்கு ரேவதியை சந்திக்கிறார். அவள் கல்யாணம் நின்று போக, தனக்கு கிடைத்த அந்தப் பணம்தான் காரணம் என்பது தெரியவர, அதிர்ச்சி அடைகிறார். அதற்கு பரிகாரமாக ரேவதியை திருமணம் செய்துகொள்ள முடிவெடுக்கிறார் மோகன். இதற்கிடையில் தனது முதலாளியின் வீட்டில் இருந்து தன்னிடம் அடிக்கடி போனில் பேசுவது இளவரசி என்பது கடைசியில் தெரியவருகிறது. மோகன் என்ன முடிவெடுக்கிறார் என்பது படம்.
வெள்ளிவிழா நாயகன் மோகன், இளவரசி, ரேவதி, சந்திரசேகர், டெல்லி கணேஷ், வி.கோபாலகிருஷ்ணன் நடித்த இந்தப் படத்துக்கு மிகப்பெரிய பலம், இளையராஜா.
‘கூட்ஸ் வண்டியிலே...’, ‘நிலவு தூங்கும் நேரம்’, ‘கை வலிக்குது கை வலிக்குது மாமா’ உட்பட அனைத்துப் பாடல்களும் ஹிட். வாலி, கங்கை அமரன் பாடல்களை எழுதியிருந்தனர். வி.எஃப்.எக்ஸ் விஷயங்கள் இல்லாத அந்தக் காலத்திலேயே ‘கூட்ஸ் வண்டியிலே’ பாடலின் விஷுவலில் புதுமையாக மிரட்டியிருப்பார்கள்.
இந்தப் படத்தில் சில இடங்களில் வரும், ‘ஒரு பகவத் கீதையிலயோ, ஒரு குர் ஆன்லயோ, ஒரு பைபிள்லயோ இப்படித்தான் ஒரு சம்பவம் நடக்கும்னு இருந்தா, அதை மாத்த யாராலயும் முடியாது’ என்ற வசனம் அப்போது பிரபலம்.
1985-ம் ஆண்டு இதே நாளில் வெளியாகி, 38 வருடங்களானாலும் கூட்ஸ் வண்டியின் நினைவுகள், தண்டவாளச் சத்தம் தாண்டி கேட்டுக் கொண்டிருக்கின்றன.