தமிழ் சினிமா

64-வது வருடத்தில் ‘கவலை இல்லாத மனிதன்’

செய்திப்பிரிவு

பாடலாசிரியராக, காலத்தால் அழியாத பல இனிமையானப் பாடல்களைத் தந்திருக்கிற கவிஞர் கண்ணதாசன் தயாரித்த படங்களில் ஒன்று, ‘கவலை இல்லாத மனிதன்’. சந்திரபாபு, டி.எஸ்.பாலையா, எம்.ஆர்.ராதா, டி.ஆர்.மகாலிங்கம், ராஜசுலோச்சனா, எம்.என்.ராஜம் உட்பட பலர் நடித்த இந்தப் படத்தில் கண்ணதாசன் கவுரவ வேடத்தில் நடித்திருப்பார். கல்லூரி பட்டமளிப்பு விழாவில் அவர் பேசுவதில் இருந்துதான் தொடங்கும் படம்.

சந்திரபாபு ஒழுங்காக கால்ஷீட் தரமாட்டார் என்ற குற்றச்சாட்டுகளைப் பல தயாரிப்பாளர்கள் அப்போது முன்வைத்தபோதும், தனக்காக, தன் நட்புக்காக அவர் ஒழுங்காக படப்பிடிப்புக்கு வருவார் என்ற அதீத நம்பிக்கையோடு அவரை நாயகனாக்கி இந்தப் படத்தைத் தயாரித்தார் கண்ணதாசன்.

ஆனால், வழக்கம்போல தாமதமாகப் படப்பிடிப்புக்கு வருவதையே தொழிலாகக்கொண்டிருந்தார் சந்திரபாபு. இதனால் படப்பிடிப்பு பாதிக்கப்பட்டது. ஒருமுறைசந்திரபாபுவின் வீடு தேடி கண்ணதாசன் சென்றபோது, அவர் தூங்கிக் கொண்டிருப்பதாகச் சொன்னார்கள். அவர் வீட்டு வாசலில் 2 மணி நேரம் காத்திருந்து விட்டு மீண்டும் விசாரித்தால், அவர் பின் வாசல்வழியாக வெளியேறிவிட்டதாக கண்ணதாசனே வருத்தத்துடன் கூறியிருக்கிறார்.

விஸ்வநாதன் -ராமமூர்த்தி இசையில் இனிமையான பாடல்களைக் கொண்ட இந்தப் படத்தில்தான், ‘பிறக்கும்போதும் அழுகின்றான்/ இறக்கும்போதும் அழுகின்றான்’என்ற பாடல் இடம்பெற்றது.

கே.சங்கர் இயக்கத்தில் உருவான இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. ‘கவலை இல்லாத மனிதன்’ படத்தைத் தயாரித்துவிட்டு பெரும் கவலையோடு அலைந்தார் கண்ணதாசன்.

1960-ம் ஆண்டு ஆக.19-ல் வெளியான இந்தப் படம் இன்று 64-வது வருடத்தில் அடியெடுத்து வைக்கிறது.

SCROLL FOR NEXT