சென்னை: தெருக்கூத்தை மையமாக வைத்து உருவாகும் படத்துக்கு ‘டப்பாங்குத்து’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இதில் சங்கரபாண்டி, தீப்தி, காதல் சுகுமார், துர்கா, உட்பட பலர் நடிக்கின்றனர். எஸ்.ஜெகநாதன் தயாரிக்கிறார். எஸ்.டி.குணசேகரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதியுள்ளார். ஆர்.முத்து வீரா இயக்குகிறார்.
படம் பற்றி அவர் கூறும்போது, “கரகாட்டம் போல் மதுரை சுற்று வட்டாரப் பகுதிகளில் திருவிழா நாட்களில் தெருக்கூத்து போடுவார்கள். அதில், ராஜா ராணி ஆட்டம், பேயாட்டம், டப்பாங்குத்து, கொலை சிந்து என விதவிதமாக ஆடி பாடி, விடியும்வரை ரசிக்க வைப்பார்கள். அதை மையமாகக் கொண்டு இந்தப் படம் உருவாகிறது” என்றார்.