சென்னையில் கடந்த வாரம் பெய்த கனமழையின்போது காவல்துறையினர் களத்தில் இறங்கி செயல்பட்டதைக் குறிப்பிட்டு நடிகர் விஷால் தமிழக காவல்துறைக்கு பாராட்டு தெரிவித்துள்ளார். சென்னை காவல் ஆணையருக்கும் அவர் நன்றி தெரிவித்திருக்கிறார். நம்ம சென்னை.. நம்ம போலீஸ் என்று தலைப்பிட்டு அவர் பாராட்டை பதிவு செய்திருக்கிறார்.
இது தொடர்பாக அவர் தனது ஃபேஸ்புக் பக்கத்தில், "அண்மையில் வடகிழக்கு பருவமழை வெளுத்துவாங்கியபோது, சென்னையிலும் மற்ற பகுதிகளிலும் பல குடியிருப்புப் பகுதிகள் வெள்ளக்காடாகின. அணைகள் பலவற்றில் நீர் இருப்பு அதிகரித்திருந்தது. பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை அறிவிக்கப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கை வெகுவாக பாதிக்கப்பட்டது.
ஆனால், என்ன நடந்தாலும், மழை எவ்வளவு தீவிரமாக பெய்தாலும் சில தன்னார்வலர்கள் களத்தில் இறங்கி பணி செய்துகொண்டிருந்தனர். துயரத்தில் இருந்த பொதுமக்களுக்கு உதவிக் கொண்டிருந்தனர்.
"நன்மையைப் பாராட்டுவதிலேயே அனைத்து நன்மையும் அடங்கியிருக்கிறது" இது திபெத் மதகுரு தலாய் லாமாவின் வாக்கு.
கனமழையின்போது களத்தில் பணியாற்றிய காவல்துறையினரை பாராட்டியேதீர வேண்டும். மழையால் தேங்கிய தண்ணீர் பல பகுதிகளிலும் வடிந்துவிட்டது. ஆனால், மழைநீர் சூழ்ந்துகிடந்த அந்த நாட்களில் காவல்துறையினர் களத்தில் ஆற்றிய பணி மற்ற அரசு துறைகளுக்கு முன்மாதிரியாக இருந்தது. 24 மணி நேரம் அயராது உழைத்தனர்.
சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் ஐபிஎஸ்.ஸுக்கு எனது மனப்பூர்வ வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன். அதேவேளையில் சென்னை போக்குவரத்து போலீஸாரின் பங்களிப்பை பாராட்டாமல் போனால் நான் கடமை தவறியவனாகிவிடுவேம். தமிழ்நாடு பேரிடர் மேலாண்மை குழுவினருக்கும் எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
வடகிழக்கு பருவமழையால் தமிழகம் முழுவதும் நல்ல பெய்ய வேண்டும் என நான் விரும்புகிறென். அதே நேரத்தில் தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் சென்னை மழை போன்ற நிலை ஏற்பட்டால் சென்னை போலீஸாரைப் போல் மற்ற மாவட்ட போலீஸாரும் உற்சாகத்துடனும் கண்காணிப்புடனும் செயல்பட வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.
அரசு துறைகளுடன் இணைந்து செயல்பட்ட தன்னார்வலர்களுக்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
நம்ம போலீஸ், நம்பகமான போலீஸ்"
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.