'சினிமா பைனான்சியர் அன்புச்செழியனை அனைவரும் சற்று மிகைப்படுத்தி சித்தரிப்பதாக தோன்றுகிறது' என நடிகரும் தயாரிப்பாளரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி தெரிவித்துள்ளார்.
சினிமா இணை தயாரிப்பாளர் அசோக்குமார் கடந்த 21-ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். அவர் எழுதி வைத்திருந்த தற்கொலை கடிதத்தில், சினிமா பைனான்சியர் அன்புச்செழியன் வட்டி மேல் வட்டி கேட்டு நெருக்கியதாகக் குறிப்பிட்டிருந்தார். இந்நிகழ்வு திரைத்துறையில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
அன்புச்செழியனுக்கு சினிமா துறையின் பல்வேறு தரப்பினரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், இன்று (வியாழக்கிழமை) காலை இயக்குநர் சீனு ராமசாமி அன்புசெழியனுக்கு ஆதரவாக ட்வீட் செய்திருந்தார்.
அவரைத் தொடர்ந்து தற்போது நடிகரும் இயக்குநருமான விஜய் ஆண்டனியும் அன்புசெழியனுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்துள்ளார்.
விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ள அறிக்கையில்,
"நடிகர் சசிகுமார் மிகவும் சிறந்த இயக்குநர் மற்றும் நல்ல மனிதர். அவரது உறவினர் அசோக்குமர் தற்கொலையை நினைத்து நான் மிகவும் மனவேதனைப்படுகிறேன். அசோக்குமார் தனது மனைவி, பெற்றோர் மற்றும் குழந்தைகளை தவிக்கவிட்டுவிட்டு தற்கொலை செய்யும் முடிவை தவிர்த்திருக்க வேண்டும்.
நான் கடந்த 6 வருட காலமாக, தயாரிப்பாளர் மற்றும் திரைப்பட வினியோகஸ்தர் அன்புச்செழியனிடம் பணம் வாங்கித்தான் படங்கள் எடுத்து வருகிறேன். இதுநாள் வரையில் அவர் என்னிடம் சரியான முறையில்தான் நடந்து வருகிறார். அனைவரும் அவரை சற்று மிகைப்படுத்தி சித்தரிப்பதாக தோன்றுகிறது.
திரைப்படத் துறையில் 99% தயாரிப்பாளார்கள் மற்றும் நடிகர்கள், கடன் வாங்கிப் படம் எடுத்துதான் இந்நாள் வரையில் முன்னேறி இருக்கிறார்கள்.
அசோக்குமார் மரணம் தற்கொலையில் கடைசி மரணமாக இருக்க வேண்டும். நான் தற்கொலைக்கு எதிரானவன். ஏனென்றால் தற்கொலை செய்து கொண்ட என் தந்தையால் நானும், என் தாய் மற்றும் என் குடும்பம் அனுபவித்த கஷ்டம், எனக்கு நன்றாகத் தெரியும்.
எனக்கும் கடன் இருக்கிறது, உழைத்துக் கொண்டிருக்கிறேன். அசோக்குமார் ஆத்மா சாந்தியடையட்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார்.