வாழ்க்கை அப்படித்தான். இங்கே எதைச் செய்யாமலும் எதுவுமே சாத்தியமில்லை. ஒரு சின்னப் பாராட்டுக்குப் பின்னே மிகப்பெரிய உழைப்பு இருக்கவேண்டும். அந்த உழைப்பினூடே திறமை இருக்கவேண்டும். அதிலும் அசாத்தியத் திறமை இருந்துவிட்டால், மிகப்பெரிய உயரத்தையும் பதக்கங்களையும் கவுரவத்தையும் கம்பீரத்தையும் பெற்றுவிடமுடியும். அசுரத் தனமான இந்த வாழ்க்கை, வாழ்க்கையை அதன் போக்கிலெல்லாம் பயணிக்கச் செய்து, கொஞ்சம் கொஞ்சமாக அந்த வாழ்க்கையை, நம் வாழ்வாக, நம் எண்ணமாக திருப்பி, திசை திருப்பி, மடை மாற்றி ஓட விடுவதற்கு கடும் உழைப்பும் லயிப்பும் இருக்கவேண்டும். இந்த உழைப்புக்கும் லயிப்புக்கும் உதாரண புருஷர் கமல்ஹாசன்!
சுதந்திரப் போராட்டத் தியாகியின் மகனாகப் பிறந்ததால் மட்டுமே இது சாத்தியமாகி விடுமா. காசு பணத்துக்குக் குறைவில்லாத, மேல்தட்டுக்காரராக வளர்ந்ததாலேயே இவையெல்லாம் இலகுவாகக் கிடைத்துவிடுமா. கலைத்தாயே வந்து ஏவி.எம். எனும் உயர்ந்த நிறுவனத்தின் மூலமாக தோளில் தூக்கிவைத்து, உச்சி முகர்ந்து அறிமுகப்படுத்தி விட்டால், அடுத்தடுத்து எல்லாமே சுலபமாகக் கிடைத்துவிடுமா. இன்றைக்கு உலக நாயகன் பட்டம். உலகமே திரும்பிப் பார்க்கும் முக்கியமான நடிகர். ஆனால் இந்த உயரம் தொட... கமல் எனும் அசுரனால் மட்டுமே முடியும்!
ஜெமினிகணேசனால் களத்தூர் கண்ணம்மா, பார்த்தால் பசி தீரும் மூலம் சிவாஜிகணேசன், ஆனந்த ஜோதியில் எம்.ஜி.ஆர், கவியரசு கண்ணதாசனின் வானம்பாடியிலும் பீம்சிங்கின் பாதகாணிக்கையிலும் என அருமையான ஓபனிங் கிடைத்தாலும் குட்டிப்பையனுக்கும் வாலிப இளைஞனுக்கும் நடுவேயான காலம் வெற்றிடமாகத்தான் இருந்தது. ஆனால், அந்த வெற்றிடத்தை பரதம் கற்றுக் கொண்டும், இசையை அறிந்து கொண்டும், தொழில்நுட்பங்களை புரிந்து கொண்டும் என மாணவனாகப் பயின்று தேறினார். இன்றைக்கு வாத்தியாராகி இருக்கிறார்.
எம்.ஜி.ஆரின் தெய்வத்தாய் மூலம் வசனகர்த்தாவாக அறிமுகமாகி, சிவாஜியுடன் சேர்ந்து எதிரொலி கொடுத்து, ‘ரூட்டை மாத்து” என்பதற்குப் பதிலாக, தனி ரூட்டே போட்ட கே.பி. எனும் இயக்குநர் சிகரம் பாலசந்தருக்கு, கிடைத்த முத்துகளில்... கமலும் உண்டு. சொல்லப்போனால், புத்தம்புது மலரெனக் கிடைத்தார் கமல். அவரை அரங்கேற்றம், சொல்லத்தான் நினைக்கிறேன், மூன்று முடிச்சு, அவள் ஒரு தொடர்கதை, அவர்கள் என்று தொடங்கி, உன்னால் முடியும் தம்பி வரை பயன்படுத்தி, மெருகேற்றினார். மெருகை மெருகு குலையாமல் உலகுக்குக் காட்டினார். ‘படத்துல டைட்டில் கார்டு இருக்கோ இல்லியோ... பாலசந்தர் படம்னா கமல் நிச்சயம் இருப்பார்’ என்று பேசினார்கள். கமலை ரசிக்க இன்றைக்கு ஏகக் கூட்டம் இருக்கிறது. ஆனால் கமலின் முதல் முழு ரசிகன் பாலசந்தர் என்றே சொல்லமுடியும்.
ஆனாலும் கதாநாயகன் எனும் முதல் முத்திரையை, தமிழ் கூறும் நல்லுலகம் வழங்கிவிடவில்லை. கன்யாகுமரி படத்தின் மூலம் மலையாளத்தில் நாயகனானார் உலக நாயகன். அதன் பிறகு கேரளாவின் செல்லப்பிள்ளையாகவே அங்கு உள்ள மக்கள் வரித்துக்கொண்டார்கள். சாப்பிட்டு, வயிறு நிரம்பியதும் ‘அப்பாடா... சாப்பிட்டாச்சு’ எனும் ரகம் அல்ல கமல். ‘இன்னும் பெட்டரா சமைக்கணும்... இன்னும் நல்லாவே சாப்பிடணும்’ என்கிற குணமும் சுவையின் ருசி கண்ட அறுசுவைக்காரருமாகவே திகழ்ந்தார் கமல்.
தமிழை சரியாகக் கற்றுக் கொண்டு பேசியதில் இருந்தே தொடங்குகிறது அடுத்தடுத்த மொழிகள் மீதான காதல். தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, வங்காளம் என உலகையே சுற்ற உலகநாயகனால் மட்டுமே முடியும். கொஞ்சம் காசு சேரும் போதே, தயாரிப்புக் கம்பெனி தொடங்குகிற துணிவும் கமலுக்கு மட்டுமே ஆன ஆசை, லட்சியம், வெறி! சினிமாக் கனவு. சினிமா வாழ்வு. சினிமாதான் மூச்சு எதிலும் வித்தியாசம் என்பது ரத்தத்திலும் ரத்தத்தின் ஹீமோக்ளோபினிலும் அவருக்கு ஊறிப்போனவை. பார்வையற்றவராக நடித்த படத்துக்கு ராஜ பார்வை என்றும் யாருமே பேசாமல் நடித்த படத்துக்கு பேசும் படம் என்றும் ஜாதியாவது புடலங்காயாவது என்று சொல்லும் படத்துக்கு தேவர்மகன் என்றும் பெயர் வைத்த கமல், மகாநதி என்று பெயர்வைத்துவிட்டு, கிருஷ்ணசாமி, யமுனா, பஞ்சாபகேசன், பரணி, காவேரி, சரஸ்வதி, தனுஷ் என்று நீர்நிலைகளின் பெயர்களையெல்லாம் பார்த்துப் பார்த்து வைத்த ரசனைக்கார சூரனானார்!
கமலை வாழ்த்தும் போது, பாராட்டும் போது இன்னும் சிலரையும் பாராட்டி வாழ்த்த வேண்டும். அவர்களில் இயக்குநர் பாரதிராஜாவுக்கு தனியிடம் உண்டு. அதுவரை அழகன், பேரழகன், காதலன், காதல் இளவரசன் என்றெல்லாம் பெயரெடுத்திருந்த கமலஹாசன் எனும் நட்சத்திர ஹீரோ, பாரதிராஜாவுக்கு த் தேவைப்பட்டார். ஆனால் அழகற்றவனாக... சப்பாணியாக! இன்றைக்கு கமலின் அண்ணன் சாருஹாசனுக்கு இருக்கும் குழப்பம், அப்போதும் இருந்தது. ’ என்னய்யா டைரக்டர் நீ. என் தம்பியை கோமணமெல்லாம் கட்டி நடிக்க வைச்சு, நாசப்படுத்துறியே...’ என எகிறினார். ஆனால் ‘16 வயதினிலே’ நூறாயுசுப் படமாக வந்து ஜொலித்தது. இன்னும் ஒளிர்ந்து கொண்டே இருக்கும்.
நடுவே பத்திரிகைகளில் கவிதைகள் எழுதினார் கமல். முன்பு உதவி நடன இயக்குநராக தங்கப்பன் மாஸ்டரிடம் பயின்றதை இன்னும் இன்னும் புதுப்பித்துக் கொண்டார். கதைகள் எழுதினார். கட்டுரைத் தொடர்களில் முத்திரை பதித்தார். அன்பு நண்பர் ஆர்.சி.சக்தியுடன் இணைந்து கதையும் திரைக்கதையுமாக எழுதித் தள்ளினார். களத்தூர் கண்ணம்மாவில் தன்னுடன் நடித்த தசரதன் இயக்குநரான போது, அவருக்காக ‘அண்ணா வாடா தம்பி வாடா” எனப் பாட்டுப் பாடினார். பின்னர் மோகனுக்காக ‘பொன்மானை தேடுதே என் வீணை பாடுதே’ என்றும் அஜித்துக்காக ‘முத்தே முத்தம்மா முத்தம் ஒண்ணு தரலாமா’ என்றும் பாடியதெல்லாம் தோழமை கெளரவத்துக்கான கிரீட மயிலிறகுகள்!
‘அண்ணே... ரெண்டுபேரையும் வைச்சு ஒரு படம் எடுக்கறதுக்கு, ரெண்டு படம் எடுங்க. தனித்தனியா எடுங்கண்ணே. வியாபாரம் பிச்சுக்கும்’ என்று பஞ்சு அருணாசலத்துக்கு ஐடியா கொடுத்து, தான் ஒரு வர்த்தக வித்தைக்காரன் என உணர்த்தினார். ‘ஹிந்திப் படம் எப்ப வேணாப் பண்ணலாம்ணே. முதல்ல சொந்தமா வீடு வாங்குங்க’ என்று அதே பஞ்சு அருணாசலத்திற்கு வீடு வாங்கும் யோசனை சொன்னதில், அவரின் நல்லெண்ணம் புரிகிறதுதானே!
அதனால்தான் எங்கு திரும்பினாலும் அவருக்கு நட்புக் கூட்டம் உண்டு. அதுவும்... வயது வித்தியாசமே இல்லாமல்! சுஜாதா, பாலகுமாரன், பேராசிரியர் ஞானசம்பந்தன், கவிஞர் புவியரசு, பிரளயன் என மாபெரும் படைப்பாளிகளும் பேச்சாளிகளும் இவருக்கு எப்போதுமே நெருக்கம். அணுக்கம். இந்தப் பக்கம் எழுத்துச்சித்தருடன் வரலாறு பேசுவார். அந்தப் பக்கம் சுஜாதாவுடன் விஞ்ஞானம் பேசுவார். திடீரென்று தொ.ப.வுடன் ஆய்வுகள் மேற்கொள்வார். கொஞ்சம் ஜாலி மூடில், கிரேஸிமோகனுடன் கலாய்த்துச் சிரித்து ரசித்து, நம்மையெல்லாம் கலகலவென கலகலப்பூட்டிவிடுவார். கங்கையை சொம்புக்குள் அடைக்க முடியாதது போல்தான் கமலும். இதுதான்... இது மட்டும்தான் என்றெல்லாம் நிறுத்திப்பார்ப்பதற்கு எந்தத் தராசும் இல்லை. நின்று விடுவது என்பதே அவர் எண்ணத்தில் இல்லை போலும்! அதனால்தான் அவர் சகலகலா வல்லவன்!
‘மை டியர் ராஸ்கல்’ என்று கே.பி. கடிதம் எழுதிச் சிலிர்ப்பார். ‘அன்பு கமல். உன் மேல் எனக்குக் கோபம். உண்மையிலேயே உன் மேல் எனக்குக் கோபம். இத்தனை ஆண்டுகள் சினிமா உலகில் இருந்துகொண்டு, இன்னுமா ஆஸ்கர் வாங்கவில்லை’ என கே.விஸ்வநாத் செல்லக் கோபம் காட்டுவார். சிங்கீதம் சீனிவாசராவ் எனும் பிரமாதமான இயக்குநரை, கமல் வழியே பார்த்ததையும் யோசிக்கவேண்டும். மகேஷ் எனும் புதிய இசையமைப்பாளரை அறிமுகப்படுத்தி , சீக்கிரமே இறந்துவிட்ட அவரை, சாகாவரம் கொடுத்த கமல்... நம்மவர்தான்!
சகலகலாவல்லன். உண்மையிலேயே சகலகலாவல்லனானார். நம்மவர். ஆமாம்... ரசிகர் மன்றங்களை இந்தியாவிலேயே, நற்பணி இயக்கமாக மாற்றியும் தன் ரசிகர்களை ரத்ததானம் வழங்கச் செய்தும் முப்பது வருடங்களுக்கு முன்பே நம்மவரானார். ‘உடல்தானமா... அப்படீன்னா’ என்று புரியாமல் குழம்பிய வேளையில், உடல் தானம் செய்து அதற்கொரு வழியை உருவாக்கினார். விஸ்வரூபப் பிரச்சினை, தனிப்பட்ட நபருக்கும் இவருக்குமான பிரச்சினை என முளைத்து, அரசுக்கும் இவருக்குமான பழிபடலம் என்றான போது, விஸ்வரூபமெடுத்தார். வழக்கு தொடுத்தார்.
பாபர் மசூதி இடிப்பு முதல், தமிழ் ஈழப் பிரச்சினை என்று சமூகத்தின் கொடூர நிகழ்வுகளின் போதெல்லாம் எப்போதும் கண்டனப் பதிவை உரக்கச் செய்பவர், இப்போதும் அதையே இன்னும் இன்னும் உரக்கச் செய்து வருகிறார். ஊர் தெரியச் செய்யத் தொடங்கிவிட்டார். உலகறிய குரலொலிக்கச் செய்து வருகிறார்.
கமல் எப்போதுமே தனிமாதிரிதான். மிகப்பெரிய உச்சநட்சத்திரங்கள், விளம்பரத்தில் நடிக்கமாட்டார்கள் இங்கே. தடாலென்று அதை உடைத்தார். விளம்பரப் படங்களில் நடித்தார். சின்னத்திரைக்குள் காலம் போன கடைசியில் தான் வருவார்கள். ஆனால், ஒரு நிகழ்ச்சித் தொகுப்பாளராக இருந்து, என்னவெல்லாம் சிறப்புகளும் பெருமைகளும் சேர்க்கமுடியுமோ... அவற்றை சின்னத்திரையில் பெரியநாயகனாக நிகழ்த்திக் காட்டினார்.
சினிமா போல, பாட்டு போல, டான்ஸ் மாதிரி, டெக்னிக்கலானது அல்ல அரசியல். ஆனால் கமலிடம் உள்ள உண்மையும் நேர்மையுமே, நேயமும் கரிசனமுமே , கோபமும் தவிப்புமே... இன்றைக்கு அரசியலுக்கு அவரை இட்டு வந்திருக்கிறது.
‘கமலை அரசியல் தெரியாதவன்னு சொல்லாதீங்கப்பா. தெரியலேன்னா, கத்துக்கிட்டு வந்து உங்களையெல்லாம் திருப்பியடிப்பான்’ என்று பாரதிராஜா சொன்னதுதான்... கமலின் போராட்டக் குணத்துக்கு ஒரு சோறுபதம்!
கமல் எனும் கலைஞன், மனிதநேயத்துக்கு சொந்தக்காரன், இன்றைய உலக நாயகன்... நாளை... தமிழுலகின் நாயகனாகவும் மிளிரலாம்; ஒளிரலாம்; ஜெயிக்கலாம்!
நாளை... எப்படியோ... இன்றே தெளிந்த சிந்தனையிலும் நேர்படப் பேசுவதிலும் நாயகன் தான். உண்மை எப்போதும் ஜெயிக்கும். உண்மைதான் எப்போதும் ஜெயிக்கும். உண்மையானவர்களுக்கும் நேர்மையானவர்களுக்கும் கூட இதுவே பொருந்தும்!
எம்.ஜி.ஆர். மாதிரி ஜெயிப்பாரா... சிவாஜி மாதிரி தோற்பாரா... பாக்யராஜ், ராஜேந்தர், ராமராஜன் என்றெல்லாம் உதாரணம் சொல்லிப் பேசுகிறார்கள் சிலர்.
ஒன்றே ஒன்றுதான்... கமல் என்பவர் யார் தெரியுமா? கமலைத் தவிர வேறு யாராக இருக்க முடியும், சொல்லுங்கள்!
வாழ்த்துகள் கமல் சார். பிறந்த நாளுக்கும், புதிதாய்ப் பிறந்தநாளுக்கும்!