சென்னை: விஷால் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள படம், 'மார்க் ஆண்டனி'. இதில் விஷால் ஜோடியாக ரிது வர்மா நடிக்கிறார். வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார். மற்றும் சுனில், செல்வராகவன் உட்படப் பலர் நடிக்கின்றனர். மினி ஸ்டூடியோஸ் சார்பில் வினோத் குமார் தயாரிக்கும் இந்தப்படத்துக்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இந்தப் படத்தின் புரமோஷன் நிகழ்ச்சி செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரியில் நடந்தது. விஷால், எஸ்.ஜே.சூர்யா, ஆதிக் ரவிச்சந்திரன் உட்படப் படக்குழுவினர் கலந்துகொண்டனர்
எஸ்.ஜே.சூர்யா பேசும்போது கூறியதாவது: இந்தப் படத்தில் மார்க்கும் ஆண்டனியும் விஷால்தான். நான் ஜாக்கிப் பாண்டியனாக வருகிறேன். இந்தப் படத்தை 'மாநாடு 2' என்று சொல்லலாம். இதிலும் கொஞ்சம் டைம் ட்ராவல் கதை இருக்கிறது. இந்தக் கதையைக் கேட்டதும் அனைவரையும் இந்தப் படம் ரசிக்க வைக்கும் என்று தோன்றியது. கேங்க்ஸ்டர் பின்னணியில் அருமையான சென்டிமென்ட் கதை. சயின்ஸ் பிக்ஷன் விஷயங்களும் இருக்கின்றன. இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன் இதன் திரைக்கதையை அருமையாக எழுதியிருக்கிறார். கிளைமாக்ஸில் ஆச்சரியமான விஷயம் இருக்கிறது. அதைப் பார்த்தால் அதிகம் மகிழ்வீர்கள். உலகம் வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது. செயற்கை நுண்ணறிவு விஷயங்கள் வளர்ந்துகொண்டிருக்கின்றன. நீங்கள் மருத்துவ மாணவர்கள். மருத்துவம் படிப்பது எவ்வளவு கஷ்டம் என்று தெரியும். அதனால் சுய கட்டுப்பாட்டுடன் இந்தச் சமூகத்தை நல்ல முறையில் வைத்துக்கொள்ள வேண்டிய பொறுப்பு உங்களுக்கு இருக்கிறது. இவ்வாறு எஸ்.ஜே.சூர்யா கூறினார்.