'ஏமாலி' படத்தின் டீஸரால் உருவாகியுள்ள சர்ச்சைக்கு, அதுல்யா ரவி தனது ஃபேஸ்புக் பதிவில் விளக்கமளித்துள்ளார்.
வி.இசட்.துரை இயக்கத்தில் சாம் ஜோன்ஸ், சமுத்திரக்கனி, அதுல்யா ரவி உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'ஏமாலி'. எழுத்தாளர் ஜெயமோகன் வசனம் எழுத, சாம் டி.ராஜ் இசையமைத்திருக்கிறார்.
இப்படத்தின் டீஸர் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இதில் அதுல்யா ரவி முதன் முறையாக கவர்ச்சியாக நடித்துள்ளார். அந்த டீஸரில் உள்ள அதுல்யா ரவியின் புகைப்படங்களை பலரும் பகிர்ந்து தங்களுடைய கருத்துகளைத் தெரிவித்து வந்தார்கள்.
இந்த சர்ச்சையைத் தொடர்ந்து அதுல்யா ரவி தனது ஃபேஸ்புக் பதிவில் கூறியிருப்பதாவது:
நேர்மறை சூழலை உருவாக்கியவர்களுக்கு நன்றி. உங்கள் புரிதலுக்கு நன்றி. டீஸரைப் பார்த்து அந்த கதாபாத்திரத்தைப் பற்றியும், திரைப்படம் பற்றியும் தீர்மானிக்காதீர்கள். கண்டிப்பாக படத்தில் நான் நேர்மறையான கதாபாத்திரமாகத்தான் இருப்பேன். சில எதிர்பாராத காட்சிகள் மூலம் சிலரை ஏமாற்றியதற்கு மன்னித்துவிடுங்கள். அது படத்தில் வராது. என்னைப் பாராட்டிய சிலருக்கு நன்றி. எனது கதாபாத்திரத்துக்கு நான் நியாயம் செய்திருக்கிறேன்.
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.
அதுல்யா ரவியின் ஃபேஸ்புக் பதிவால், இக்காட்சிகள் படத்தில் இடம்பெறுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.