தமிழ் சினிமா

இந்திப் படத்தில் சண்டை இயக்குநராக அறிமுகமாகும் ஸ்டன் சிவா மகன் கெவின் குமார்

செய்திப்பிரிவு

சென்னை: பிரபல சண்டை இயக்குநர் ஸ்டன் சிவா. 25 வருடங்களுக்கு மேலாக திரைத்துறையில் பணியாற்றி வரும் இவர், முன்னணி ஹீரோக்களின் படங்களுக்கு சண்டை காட்சிகளை வடிவமைத்து வருகிறார். சமீபத்தில் வெளியான ருத்ரன், விடுதலை, கஸ்டடி, அடுத்து வெளியாக இருக்கும் ரஜினியின் ‘ஜெயிலர்’ உட்பட பல படங்களிலும் பணியாற்றியுள்ளார். இந்நிலையில் இவர் மகன் கெவின் குமார் சண்டை இயக்குநராக அறிமுகமாகிறார்.

இதுபற்றி கெவின் குமாரிடம் கேட்டபோது கூறியதாவது:

2015-ம் வருடத்தில் இருந்து 2018 வரை கராத்தே போட்டியில், மாநில, தேசிய, உலக அளவில் இந்தியா சார்பாக பங்கேற்றிருக்கிறேன். பல வருடங்களாக என் தந்தையுடன் இணைந்து தமிழ், தெலுங்கு உட்பட தென்னிந்திய மொழி படங்கள் அனைத்திலும் ஆக் ஷன் காட்சிகளில் பணியாற்றினேன். தெலுங்கில் வெளியாகி வெற்றிபெற்ற பாலகிருஷ்ணாவின் ‘அகண்டா’ படத்தில் அப்பாதான் மாஸ்டர். அதில் சில சண்டைக் காட்சிகளை அமைத்தேன். அது பேசப்பட்டது. அடுத்து ரவிதேஜாவின் ‘ராமாராவ் ஆன் டூட்டி’ உட்பட சில படங்களுக்கு சண்டைக்காட்சிகள் அமைத்தேன். ‘ஜெயிலர்’ படத்துக்காக இயக்குநர் நெல்சன் திலீப்குமார் அழைத்தார். அதில் சில சண்டைக் காட்சிகளை அமைத்தேன். ரஜினி சார் என் பணியை பாராட்டி ஆசி வழங்கினார். இப்போது, சூரஜ் பஞ்சோலி ஹீரோவாக நடிக்கும் இந்திப் படம் மூலம் ஸ்டன்ட் இயக்குநராக அறிமுகமாகிறேன். இதில் சுனில் ஷெட்டி, விவேக் ஓபராய் உட்பட பலர் நடிக்கின்றனர். விரல் ராவ் இயக்குகிறார். அடுத்து 2 தமிழ், தெலுங்கு பட வாய்ப்புகள் வந்திருக்கின்றன. இவ்வாறு கெவின் குமார் தெரிவித்தார்.

SCROLL FOR NEXT