சென்னை: நடிகர் ஜெயராம், தமிழ், தெலுங்கு, மலையாளப் படங்களில் நடித்து வருகிறார். தமிழில் ‘பொன்னியின் செல்வன்’ படங்களில் அவர் நடித்த ஆழ்வார்க்கடியான் பாத்திரம் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. ஜெயராமின் மகன் காளிதாஸும் திரைப்படங்கள் மற்றும் வெப் தொடர்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் மலையாள சினிமாவில் இருந்து ஒரு வருடம் விலகி இருந்தது வீண் போகவில்லை என்று நடிகர் ஜெயராம் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
நல்ல படங்கள் கிடைக்கும் என்று ஒரு வருடம் மலையாள சினிமாவில் இருந்து பொறுமையாக விலகி இருந்தது வீண் போகவில்லை. இப்போது நடிக்கும் ‘ஆபிரஹாம் ஓஸ்லர்' (Abraham Ozler) படம் மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது. பலரின் அன்பால், கடந்த 35 வருடங்களாக சினிமாவில் இருக்கிறேன். மற்ற மொழிகளிலும் நடிக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்திருக்கிறது. இந்த வாய்ப்புகள் தேடி வரவேண்டும் என்று நம்புகிறேன். மணிரத்னம் இயக்கத்தில் ‘பொன்னியின் செல்வன்’ என்ற வரலாற்றுக் கதை கொண்ட படத்தில் நடித்தது பெருமை. அந்த கதாபாத்திரம் எப்போதும் பேசப்படும்.
இப்போது தெலுங்கு திரைப்படங்களிலும் நடித்து வருகிறேன். மகேஷ்பாபு நடிக்கும் குண்டூர் காரம், ஷங்கர் இயக்கத்தில் ராம் சரண் நடிக்கும் ‘கேம் சேஞ்சர்’ படங்களில் முக்கிய வேடங்களில் நடிக்கிறேன். கன்னடத்தில் சிவராஜ்குமாருடன் ‘கோஸ்ட்’ என்ற படத்தில் நடித்திருக்கிறேன்.
இவ்வாறு ஜெயராம் தெரிவித்துள்ளார்.