தனுஷ் நடித்துள்ள 'வேலையில்லா பட்டதாரி' படப் போஸ்டர்களுக்கு, தமிழ்நாடு புகையிலை தடுப்பு இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.
வேல்ராஜ் இயக்கத்தில் தனுஷ், அமலா பால் நடிப்பில் வெளியாகி இருக்கும் படம் 'வேலையில்லா பட்டதாரி'. அனிருத் இசையமைத்து இருக்கும் இப்படத்தை தனுஷ் தயாரித்திருந்தார். தமிழ்நாடு முழுவதும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது.
மக்களிடமும், தனுஷ் ரசிகர்களிடமும் பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கும் இப்படம் வசூலை வாரிக் குவித்து வருகிறது. முதல் மூன்று நாட்களில் தமிழகத்தில் மட்டும் ரூ.10 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருக்கிறது. இப்படத்திற்கு தமிழ்நாடு அரசு வரிச்சலுகை கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.
'வேலையில்லா பட்டதாரி' வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில், இப்படத்தின் போஸ்டர்களுக்கு தமிழ்நாடு புகையிலைத் தடுப்பு இயக்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
"தமிழ்த் திரையுலகின் முன்னணி நடிகர் தனுஷ் புகையிலைக் கொள்கைகளுக்கு எதிராக நடந்து கொண்டுள்ளார். அதைவிட இப்படத்திற்கு சென்சார் அதிகாரிகள் எப்படி 'U' சான்றிதழ் அளித்தார்கள் என்று தெரியவில்லை. அதுமட்டுமன்றி புகைப்பிடிப்பது போன்ற போஸ்டர்களுக்கும் அனுமதி அளித்திருக்கிறார்கள். தமிழக அரசு உடனடியாக தனுஷ் புகைப்பிடிப்பது போன்ற போஸ்டர்கள் மற்றும் விளம்பர பொருட்களை நீக்க வேண்டும்" என்று தமிழ்நாடு புகையிலைத் தடுப்பு இயக்கம் தெரிவித்துள்ளது.
நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ சிகரெட்டுக்கு விளம்பரம் தருவதைத் தடுக்க வகை செய்யும் 'சிகரெட் மற்றும் இதர புகையிலைப் பொருட்களில் வீதிமீறலுக்கான சட்டப் பிரிவு 2003-ன் கீழ், வேலையில்லா பட்டதாரி படத்தின் மீது வழக்குப் பதிவு செய்ய முடியும் என்று அந்த அமைப்பு எச்சரித்துள்ளது.
அத்துடன், வேலையில்லா பட்டதாரி போஸ்டர்களுக்கு கண்டனம் தெரிவித்து, தமிழ்நாடு சுகாதார அமைச்சகம் மற்றும் மத்திய திரைப்படத் தணிக்கை வாரியம் ஆகியவற்றையும் அணுகியிருப்பதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
மேலும், தமிழகத்தில் புகையிலைப் பொருட்களுக்கு எதிராக தீவிரமான விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ரஜினிகாந்த், கமல்ஹாசன், அஜித், விஜய் மற்றும் சூர்யா ஆகியோர் திரையில் புகைப்பிடிப்பது போன்ற காட்சிகளில் நடிப்பதைத் தவிர்த்து வருகின்றனர். குறிப்பாக, 2001-ல் 'பாபா' படம் வெளியான பிறகு, திரையில் ரஜினிகாந்த் புகைப்பிடிப்பதே இல்லை என்பது கவனிக்கத்தக்கது என்றும் அந்த அமைப்பு கோடிட்டு காட்டியிருக்கிறது.