நடிகை அஞ்சலி நடிக்கும் தமிழ் படத்தின் படப்பிடிப்பு 2 ஆண்டுகளுக்கு பிறகு சென்னையில் இன்று நடக்கிறது.
‘கற்றது தமிழ்’, ‘எங்கேயும் எப்போதும், ‘கலகலப்பு’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் அஞ்சலி. தமிழ் திரையுலகில் முக்கிய நடிகைகளில் ஒருவராக அஞ்சலி இருந்த நிலையில் அவருக்கும், அவரது சித்தி பார்வதி மற்றும் இயக்குநர் களஞ்சியத்துக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. தனது ‘ஊர் சுற்றிப் புராணம் படத்தில் நடித்து முடித்த பிறகே அவர் வேறு படங்களில் நடிக்கவேண்டும் என்று இயக்குநர் களஞ்சியம் கூறினார். ஆனால் இதற்கு ஒப்புக்கொள்ளாத அஞ்சலி, ஆந்திரா சென்றார். அங்கு தெலுங்கு படங்களில் நடித்து வந்தார்.
இந்நிலையில் 2 ஆண்டுகளுக்கு பிறகு ஜெயம் ரவி நாயகனாக நடிக்கும் புதிய படத்தில் நாயகியாக நடிக்க அஞ்சலி ஒப்பந்தமானார். இதனை அடுத்து இயக்குநர் களஞ்சியம் ‘‘என்னுடைய படத்தில் நடித்த பிறகுதான் மற்ற படங்களில் அஞ்சலி நடிக்க வேண்டும். இல்லாவிட்டால் அவரது எந்த படமும் வெளியாகாதபடி நீதிமன்றத்தில் தடை உத்தரவு வாங்குவேன்’’ என்று கூறினார். அதற்கு பதிலளித்த அஞ்சலி, “என் படங்களை யாராலும் தடுக்க முடியாது. இனி என்னை வைத்து படம் எடுக்க விரும்புபவர்களுக்கும் எந்த பிரச்சினையும் இருக்காது. தொடர்ந்து நல்ல கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்துக்கொடுப்பேன்’’ என்று கூறினார்.
இந்நிலையில் அஞ்சலி கதாநாயகியாக நடிக்கும் தமிழ்ப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் இன்று நடக்கிறது. இந்த படப்பிடிப்பில் இயக்குநர் களஞ்சியத்தின் ஆதரவாளர்களால் ஏதாவது பிரச்சினை வருமோ என்ற பரபரப்பு நிலவுகிறது.