சென்னை: நடிகர் அர்ஜுன் மகளுக்கும் நடிகர் தம்பி ராமையா மகனுக்கும் திருமணம் நடக்க இருக்கிறது.
நடிகர் அர்ஜுன்–நிவேதிதா தம்பதிக்கு ஐஸ்வர்யா, அஞ்சனா என 2 மகள்கள். இதில் ஐஸ்வர்யா, விஷால் நடித்த ‘பட்டத்து யானை’ படம் மூலம் நாயகியாக அறிமுகமானார். அடுத்து தமிழ், கன்னடத்தில் உருவான, ‘சொல்லிவிடவா’ என்ற படத்தில் நாயகியாக நடித்தார். இப்போது தந்தை அர்ஜுன் இயக்கத்தில் தெலுங்கு படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் ஐஸ்வர்யா அர்ஜுன், நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதியை திருமணம் செய்துகொள்ள இருப்பதாகச் செய்திகள் வெளியாயின. ‘அதாங்கப்பட்டது மகாஜனங்களே’ என்ற படத்தின் மூலம் அறிமுகமான உமாபதி, ‘மணியார் குடும்பம்’, ‘திருமணம்’, ‘தண்ணி வண்டி’ படங்களில் நடித்துள்ளார். இப்போது தம்பிராமையா, சமுத்திரக்கனி நடிக்கும் ‘ராஜாக்கிளி’ படத்தை இயக்கியுள்ளார்.
இதுபற்றி நடிகர் தம்பி ராமையாவிடம் கேட்டபோது கூறியதாவது: உமாபதியின் திருமணத்துக்கு கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் பெண் பார்க்கத் தொடங்கினோம். அப்போது, ஐஸ்வர்யாவை காதலிப்பதாகச் சொன்னார். நாங்கள் சம்மதித்தோம். அவர்கள் வீட்டிலும் முழு சம்மதம் என்று தெரிந்ததும் கடந்த 19-ம் தேதி அர்ஜுன் வீட்டுக்கு முறைப்படி சென்று பேசினோம். ஐஸ்வர்யா நடிக்கும் தெலுங்குப் படத்தை அர்ஜுன் இயக்கிவருகிறார். அது முடிந்ததும் திருமணம் வைத்துக்கொள்ளலாம் என்று முடிவு செய்துள்ளோம். நவ.8ம் தேதி திருமணத் தேதியை முடிவு செய்வோம். தை மாதம் திருமணம் இருக்கும். இவ்வாறு தம்பிராமையா கூறினார்.