மலைவாழ் மக்களின் மதிப்பைப் பெற்ற நக்சல் போராளியின் மகள் ரெஜினா (சுனைனா) . தன் தந்தை சுட்டுக்கொல்லப்படுவதைக் கண்டு குழந்தைப் பருவத்திலேயே இடிந்துபோகும் ரெஜினா, தந்தையின் தோழர் (பவா செல்லதுரை) அரவணைப்பில் வளர்கிறார். ஜோ (அனந்த் நாக்) உடனான காதல் திருமணம் ரெஜினாவின் வாழ்க்கையில் மறுமலர்ச்சியை ஏற்படுத்துகிறது. ஆனால் வங்கியில் கொள்ளையடிக்க வரும் கும்பலில் ஒருவன் அங்கு பணியாற்றும் ஜோவை கொன்றுவிடுகிறான். இதனால் ரெஜினாவின் வாழ்க்கை மீண்டும் புரட்டிப்போடப்படுகிறது. காவல்துறை அதிகாரிகள் ஜோவின் கொலைக்குக் காரணமான குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முயலாமல், மாதக் கணக்கில் இழுத்தடிக்கிறார்கள். நியாயம் கேட்கும் ரெஜினாவை அவமதித்து அனுப்புகிறார்கள். இதையடுத்து தன் கணவனைக் கொன்றவர்களைக் கண்டுபிடித்துப் பழிவாங்கக் கிளம்புகிறார் ரெஜினா.
இதற்காக கேரளத்தில் கடற்கரையோர உணவு விடுதியில் பணியாளராகச் சேர்கிறார். அங்கிருந்து அவர் தன் கணவனை கொன்றவர்களைக் கண்டுபிடித்தாரா? ஜோ கொல்லப்பட்டதற்கான காரணம் என்ன? இறுதியில் ரெஜினாவுக்கு என்ன ஆனது? ஆகிய கேள்விகளுக்கு விடை சொல்கிறது மீதிக் கதை.
கணவனின் மரணத்துக்கு நியாயம் கேட்டுப் போராடும் ஒற்றைப் பெண்ணை மையப்படுத்தி திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குநர் டொமின் டி சில்வா. தீயவர்களுக்கு எதிராகத் தனித்து நின்று போராடும் பெண்கள் பலவிதமான பிரச்சினைகளையும் ஆபத்துகளையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. அவற்றைக் கடந்து அவள் தன் மன உறுதியை துணையாகக் கொண்டு எதிரிகளை அழித்தொழிக்கிறாள் என்னும் கதைக் கரு ஈர்ப்புக்குரியது. ஆனால் அதற்கான வலுவான திரைக்கதையை அமைப்பதில் தடுமாறியிருக்கிறார் இயக்குநர்.
முதல் பாதி மிக மெதுவாக நகர்வதோடு நாயகிக்கு அடுத்தடுத்து ஏற்படும் இழப்புகளின் வலியைப் பார்வையாளர்களால் உணர முடியவில்லை. அந்த அளவு அந்தக் காட்சிகள் பலவீனமாக எழுதப்பட்டுள்ளன. கொள்ளையர்களைக் கண்டுபிடிக்க காவல்துறையினர் இழுத்தடிக்கும் காட்சிகளும் நம்பும்படியாக இல்லை. கேரள உணவகத்தில் பணியாற்றும் நாயகி அந்த உணவக உரிமையாளராக இருக்கும் பெண்ணுடனான நெருக்கத்தைப் பயன்படுத்தி, தனது இலக்கை நோக்கி பயணிக்கத் தொடங்கிய இடைவேளைக் காட்சியிலிருந்து திரைக்கதை சற்று சூடுபிடிக்கிறது. நாயகி குற்றவாளிகள் ஒவ்வொருவரையும் நெருங்குவதும் அதற்கு மலைவாழ் மக்கள் திரைமறைவிலிருந்து உதவுவதும் சுவாரசியமான யோசனைகள்.
நாயகி குற்றவாளிகள் ஒவ்வொருவரையும் நேருக்கு நேர் எதிர்கொள்ளும் சில காட்சிகள் இருக்கை நுனியில் அமர வைக்கின்றன. இதுபோன்ற காட்சிகளால் இரண்டாம் பாதி ஓரளவு தேறிவிடுகிறது. ஆனாலும் இந்தக் காட்சிகளிலும் காவல்துறை விசாரணை தொடர்பாக ஏகப்பட்ட தர்க்கப்பிழைகள் இருப்பதால் முழுமையாக ரசிக்க முடியவில்லை.
சுனைனா, தன் அர்ப்பணிப்பு மிக்க நடிப்பால் படத்தைத் தன் தோளில் சுமக்க முயன்றுள்ளார். சொந்தக் குரலில் பேசியிருப்பதும் பாராட்டுக்குரியது. ஆனால் தமிழ் உச்சரிப்பு பல இடங்களில் அந்நியமாக உள்ளது. பிற நடிகர்களில் பவா செல்லதுரை, நிவாஸ் ஆதித்தன் கவனம் ஈர்க்கிறார்கள். ஒரே ஒரு காட்சியில் வரும் நடிகர் சாய் தீனா வழக்கம்போல் முத்திரைப் பதிக்கிறார். சதீஷ் நாயரின் பாடல்கள் ரசிக்க வைக்கின்றன. பின்னணி இசையும் ஒளிப்பதிவும் திரைக்கதைக்குத் தேவையானதைத் தந்திருக்கிறது. ஈர்ப்புக்குரிய கதைக் கருவும் சில சுவாரசியமான காட்சிகளும் இருந்தாலும் திரைக்கதைத் தடுமாற்றங்களால் உரிய தாக்கத்தை ஏற்படுத்தத் தவறுகிறாள் இந்த ‘ரெஜினா’.