தமிழ் சினிமா

திரை விமர்சனம்: பொம்மை

செய்திப்பிரிவு

அம்மாவின் மறைவால் படிப்பில் பின்தங்கிவிடும் ராஜ்குமாரை (எஸ்.ஜே.சூர்யா) தேற்றி, பழையபடி ஆக்குகிறார் பள்ளிப் பருவத் தோழி நந்தினி. எதிர்பாராதவிதமாக தோழியையும் இழக்கும் இளைஞர் ஆனதும் சென்னையில், ஜவுளிக்கடைகளுக்கான பொம்மை தயாரிப்பு நிறுவனம் ஒன்றில் ஓவியராகப் பணிபுரிகிறார்.

அங்கே வண்ணம் தீட்டுவதற்காக வரும் ஒரு பொம்மையின் சாயல் நந்தினியை நினைவூட்ட, அதற்குக் கண்கள், உதடுகளை வரைந்து முடிக்கிறார். அடுத்த கணம், நந்தினி (பிரியா பவானி சங்கர்) தன்னைப்போலவே வளர்ந்து, இத்தனை ஆண்டுகள் காத்திருந்து தனக்காக அந்தப் பொம்மையில் இருந்து உயிருடன் வந்துவிட்டதாகக் கற்பனை செய்து கொள்கிறார். இழந்த வாழ்க்கையை பொம்மை நந்தினியுடன் வாழ்கிறார். அந்தக் கற்பனை வாழ்க்கையின் பின்னாலிருக்கும் மனச்சிக்கல் என்ன, அது அவரை எந்த எல்லைவரை அழைத்துச் சென்றது என்பது கதை.

ஜவுளிக்கடை பொம்மையுடன் காதல் என்கிற கதைக் கரு தமிழ் சினிமாவுக்கு புதியதுதான். ஃபேன்டசியான இக்கதைக்களம் எடுபட, ராஜ்–நந்தினி காதலுக்கான சவால்களும் குறுக்கீடுகளும் உணர்வுபூர்வமாகவும் நிமிர்ந்து உட்காரும்படியான திருப்பங்களையும் கொண்டிருக்க வேண்டும். இதில், அப்படி ஒன்றிரண்டு திருப்பங்கள் மட்டுமே இருக்க, நாயகனுக்கும் பொம்மையிலிருந்து உயிர்பெறும் நாயகிக்குமான உரையாடல் பகுதிகளே மிகுந்திருப்பது பொறுமைக்குப் பெரும் சவால்.

தாயை இழந்து, உடைந்து போனவனின் நம்பிக்கையை மீட்டெடுத்த ஒரு பெண், பொம்மையில் இருந்து உயிர்பெற்று வரும்போது, எதிர்மறையான கட்டளைகளை நாயகனுக்குப் பிறப்பிப்பதாகக் காட்டுவது, உணர்வைப் புறந்தள்ளிய சினிமாத்தனமாக தேங்கி விடுகிறது.

மனச்சிக்கல் வழியாக நிகழும் குற்றங்களைத் துப்பறியும் காவல் துறையின் புலன் விசாரணைப் பகுதியையாவது புத்திசாலித்தனமாக சித்தரித்திருக்கலாம். அதிலும் கோட்டை விட்டிருக்கிறார் இயக்குநர்.

எது நிஜம், எது கற்பனை எனத் தெரிந்தே தனது சிக்கலான வாழ்க்கையை ரசித்து வாழும் கதாபாத்திரத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு ரகளையான ரகம். ஆனால் தனது முதிர்ச்சியான நடுத்தர வயது தோற்றத்தைக் குறைத்துக் காட்ட அவர் முயற்சி எடுத்திருக்கலாம். பிரியா பவானி சங்கர், பொம்மை போன்ற தோற்றத்தில் வந்தாலும் பல படங்களில் அவர் பேசிய வசனங்களையே திரும்பப் பேசுவதுபோல் பேசிச் செல்கிறார். இன்னொரு நாயகியாக நடித்துள்ள சாந்தினிக்கும் கதை நகர்வில் பெரிய பங்கில்லை.

கிராமம், நகரம் என இரண்டு லொக்கேஷன்களிலும் கதையோட்டத்தைத் தாங்கிப் பிடிப்பதில் ஒளிப்பதிவும் கலை இயக்கமும் பேரளவில் கைகொடுத்திருக்கின்றன. யுவன் சங்கர் ராஜாவின் இசையில் ‘எனதுயிர் எங்கே’, ‘இந்தக் காதலில்’ ஆகிய பாடல்கள் கவர்கின்றன.

இயக்குநர் ராதாமோகன் தனது ஆடுகளத்துக்கு வெளியே போய் ஆட நினைத்த ஆட்டத்தில், உணர்வு மிஸ்ஸாகிப் போன இந்தப் பொம்மை ரன் அவுட்.

SCROLL FOR NEXT