புதிய படங்கள் வெளியீடு நிறுத்தப்பட்டு இருப்பதற்கு, 'விழித்திரு' இயக்குநர் மீரா கதிரவன் வேதனை தெரிவித்திருக்கிறார்.
மீரா கதிரவன் இயக்கத்தில் விதார்த், கிருஷ்ணா, இயக்குநர் வெங்கட்பிரபு, தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் 'விழித்திரு'. படப்பிடிப்பு முடிவடைந்து நீண்ட நாட்களாகிவிட்டாலும், பொருளாதார பிரச்சினையால் வெளியாகாமல் இருந்தது.
அனைத்து பிரச்சினைகளும் முடிக்கப்பட்டும் அக்டோபர் 6-ம் தேதி வெளியீடு என விளம்பரப்படுத்தினார்கள். ஆனால், அக்டோபர் 6-ம் தேதி முதல் புதுப்பட வெளியீடு இல்லை என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்திருக்கிறது.
இதனால் 'விழித்திரு' படக்குழு மிகவும் அதிர்ச்சியடைந்தது. இப்பிரச்சினை குறித்து இயக்குநர் மீரா கதிரவன் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
திடீரென அறிவித்த ஸ்டிரைக் காரணமாக உருவாகும் பொருளாதார நஷ்டத்தைப்பற்றி பேச தயாரிப்பாளர் சங்க கூட்டத்திற்கு வந்திருக்கிறேன். படத்தின் வியாபாரம் தொடர்பான பிரச்சினையின் பொருட்டு இங்கு வருவது இதோடு சேர்த்து எத்தனையாவது முறை என்று நினைவில்லை
படம் இயக்குவதற்கான வாய்ப்புகள் தேடி கூட இத்தனை முறை அலைந்ததில்லை. சினிமாவில் கூட்டாகச் சேர்ந்து இயங்குவது தான் பலம். அது தான் ஆகப் பெரிய பலவீனமும். அறமற்ற சில மனிதர்களுடன் பழகுவதாலும் பணிபுரிவதாலும் மனம் மிகவும் களைப்படைகிறது. யாரோ ஆடுகிற சூதாட்டத்திற்கு யாரையோ பணயம் வைத்துக் கொண்டிருக்கிறார்கள்
இவ்வாறு அவர் தெரிவித்திருக்கிறார்.