தமிழ் சினிமா

தன்ஷிகாவும் பதிலுக்கு பேசியிருந்தால் என்னவாகியிருக்கும்? - விழித்திரு சர்ச்சைக் குறித்து கஸ்தூரி

செய்திப்பிரிவு

தன்ஷிகாவும் பதிலுக்கு பேசியிருந்தால் என்னவாகியிருக்கும்? என்று 'விழித்திரு' சர்ச்சைக் குறித்து கஸ்தூரி கேள்வி எழுப்பியுள்ளார்.

'விழித்திரு' பத்திரிகையாளர் சந்திப்பில் டி.ராஜேந்தர், தன்ஷிகாவை கடுமையாக சாடினார். இதனால் மேடையிலேயே தன்ஷிகா அழத் தொடங்கினார். இந்த விவகாரம் பெரும் சர்ச்சையாக உருவாகியுள்ளது.

விஷால் உள்ளிட்ட பல்வேறு திரையுலகினர் டி.ராஜேந்தருக்கு எதிராக குரல் எழுப்பியுள்ளார்கள். இந்த சர்ச்சைக் குறித்து நடிகர் கஸ்தூரி தனது ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது:

சமீபத்தில் ஒரு படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் டி.ராஜேந்தர், தன்ஷிகாவுக்கு சகட்டு மேனிக்கு மேடை நாகரிகம் பற்றி வகுப்பு எடுத்ததுதான் இப்போது பேச்சாக இருக்கிறது.

பொதுவாக பலருக்கு , பரீட்சைக்கு நன்றாக தயார் செய்து கொண்டு போனாலே பாதி மறந்துவிடும். மேடையில் பேச சொன்னால் பதட்டத்தில் வார்த்தையே வராது. அதை மரியாதைக் குறைவு என்றோ கவனக்குறைவு என்றோ நான் உட்பட பலர் மதிக்கும் சகலகலா வல்லவர் , பண்பாளர், டி.ராஜேந்தர் கருதியிருக்க வேண்டாம். பாவம் அந்தப் பெண் எவ்வளவு மன்றாடியும் காலில் விழுந்தும் கூட டி.ராஜேந்தருக்கு மனம் இளகவில்லை. சாமியாடிவிட்டுதான் ஓய்கிறார் .

இதை மேடையில் அமர்ந்திருந்த பிரபலங்களும் தடுக்கவில்லை, நிறுத்த முயலவில்லை. வெங்கட் பிரபு , கிருஷ்ணா போன்றோர் இளித்தபடி ரசித்தபடி பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். விதார்த் கைதட்டுகிறார். கண்ணுக்கு புலப்படாத பார்வையாளர்களும் பத்திரிக்கையாளர்களும் எப்படி வினையாற்றினார்கள் என தெரியவில்லை.

சபை நாகரீகத்தைப் பற்றி இவர் பொங்கியபோது, அந்தப் பெண் பொறுமை காத்தது தான் உண்மையில் சபை நாகரிகம். மாறாக , தன்ஷிகாவும் பதிலுக்கு பேசியிருந்தால் டி.ராஜேந்தர் நிலைமை என்னவாகியிருக்கும்? எல்லாவற்றைவிட கொடுமை, பேரப்பிள்ளைகளை கொஞ்ச வேண்டிய வயதில் 'தன்ஷிகாவுக்கு நான் அண்ணண் போல' என்றாரே, அதுதான் மிக மோசமான வசை!

இறுதியில் டி.ராஜேந்தரே, "சும்மா ஒரு பரபரப்பு உண்டாக்க பேசினேன் “ என்று சொல்கிறார். அவரை சொல்லி குற்றமில்லை. வேடிக்கை பார்த்த பெரிய மனிதர்கள் தான் வெட்கப்பட வேண்டும் .

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT