சென்னை: கார்த்தியின் ‘விருமன்’ படத்தில் கதாநாயகியாக அறிமுகமான அதிதி ஷங்கர், அடுத்து சிவகார்த்திகேயன் ஜோடியாக ‘மாவீரன்’ படத்தில் நடிக்கிறார். மடோன் அஸ்வின் இயக்கும் இந்தப் படத்துக்கு பரத் சங்கர் இசை அமைக்கிறார். ‘விருமனி’ல் மதுரவீரன் என்ற பாடலைப் பாடிய அதிதி, ‘மாவீரனி’ல் யுகபாரதி எழுதிய ‘வண்ணாரப்பேட்டையில’ என்ற பாடலை சிவகார்த்தியேனுடன் இணைந்து பாடியிருக்கிறார். நேற்று வெளியான இந்தப் பாடல் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப்பாடல் பற்றி அதிதியிடம் கேட்டபோது கூறியதாவது:
இது என் இரண்டாவது பாடல். ‘மதுரை வீரன்’ கிராமத்து டச் உள்ள பாடல். அதில் என் குரலே வித்தியாசமாக இருந்தது. ‘வண்ணாரப்பேட்டை’ இனிமையான ரொமன்டிக் பாடல். சிவகார்த்திகேயன் சாருடன் இணைந்து பாடியது சிறந்த அனுபவத்தைக் கொடுத்தது. இந்தப் பாடல் வாய்ப்பைக் கேட்டது நான்தான். கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்தது இசை அமைப்பாளரும் இயக்குநரும்.
சிறு வயதில் இருந்தே இசைக் கற்று வருகிறேன். எனக்கு ஆர்வம் இருப்பதால், எந்த படம் நடித்தாலும் வாய்ப்பு இருந்தால், தயவு செய்து கொடுங்கள் என்று கேட்டுவிடுவேன். இதில் அப்படித்தான் வாய்ப்பு கிடைத்தது. தொடர்ந்து நான் நடிக்கும் படங்களில் பாடுவேனா என்பது தெரியாது. ஆனால், வாய்ப்புக் கிடைத்தால் கண்டிப்பாக பாடுவேன். இவ்வாறு அதிதி ஷங்கர் கூறினார்.