தமிழ் சினிமா

சூர்யா - செல்வராகவன் பட அப்டேட்: ஜனவரியில் படப்பிடிப்பு துவக்கம், தீபாவளிக்கு வெளியீடு

ஸ்கிரீனன்

செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கப்பட்டு, தீபாவளிக்கு வெளியிடப்படும் என படக்குழு அறிவித்துள்ளது.

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் சூர்யா நடித்துவரும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் இறுதிகட்டப் படப்பிடிப்பு சென்னையைச் சுற்றியுள்ள பகுதிகளில் நடைபெற்று வருகிறது. விரைவில் அப்பணிகள் முடிவுற்று, இறுதிகட்டப் பணிகளில் கவனம் செலுத்தவுள்ளது படக்குழு.

அதனைத் தொடர்ந்து சூர்யாவின் அடுத்த படம் குறித்து பல்வேறு தகவல்கள் வெளியாகி வந்தன. செல்வராகவன் மற்றும் சுதா கொங்கரா படங்களில் ஒரே சமயத்தில் சூர்யா நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகின.

சந்தானம் நாயகனாக நடித்துவரும் 'மன்னவன் வந்தானடி' படத்தின் படப்பிடிப்பு முடிவுபெறாத நிலையில், செல்வராகவன் - சூர்யா இணையும் படத்தின் நிலை குறித்து கேள்வி எழுந்தது.

இந்நிலையில் தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில், "செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிக்கவுள்ள படத்தின் படப்பிடிப்பு ஜனவரியில் தொடங்கப்படும். தீபாவளிக்கு வெளியாகும்" என்று தெரிவித்துள்ளார்.

இப்படத்தின் இதர நடிகர், நடிகைகள் உள்ளிட்ட விஷயங்களையும் விரைவில் அறிவிப்போம் என்றும் கூறியுள்ளார்.

SCROLL FOR NEXT