ஆசையில் வரவில்லை; அன்பில் வருகிறேன் என்று அரசியல் வருகைக் குறித்து 'பிக் பாஸ்' நிகழ்ச்சியில் கமல் தெரிவித்துள்ளார்.
பிக் பாஸ் போட்டியாளர்களில் சிநேகன், ஆரவ், கணேஷ் வெங்கட்ராம் மற்றும் ஹரிஷ் ஆகியோர் இறுதிப் போட்டிக்கு தேர்வானார்கள். அவர்களில் யார் வெற்றியாளர் என்பதற்கான வாக்கெடுப்பு நடத்தப்பட்டது. நேற்று நடந்த நிகழ்வில் ஆரவ் வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார்.
இந்நிகழ்ச்சியில் தனது பேச்சுக்கு இடையே, அரசியல் வருகைக் குறித்து கமல் சூசகமாக பேசினார். அதில் கமல் பேசியதாவது:
இந்நிகழ்ச்சிக்கு நீங்கள் காட்டிய அன்புக்கு கடமைப்பட்டு இருக்கிறேன். இந்நிகழ்ச்சியை கண்டு கொண்டிருக்கும் ஆறரைக் கோடி மக்களுக்கு நன்றி. அந்த ஆறரைக் கோடி எட்டு கோடியாக வேண்டும் என்பது ஆசை. இது முடிவல்ல துவக்கம்.
தொடர்ந்து இந்த உரையாடல் நடக்கும். அங்கு வருவேன், வந்தே தீருவேன். வருவேன், வருவேன் என்கிறீர்களே என்னவாக வருவேன் என்று கேட்காதீர்கள். தொண்டர் அடிப்பொடியாக வருவேன். ஆசையில் வருவதில்லை அன்பில் வருகிறேன். வெறும் ஆர்வத்தில் வருவதல்ல, கடமையில் வருகிறேன்.
இங்கு கிடைத்த அதே அன்பு, அங்கும் கிடைக்கும் என்பதற்கான அச்சாரம் எனக்கு கிடைத்துவிட்டது. இனி என்ன வேலை எனக்கு என கேட்க மாட்டேன். உங்கள் வேலைத் தான் என் கடமை, என் வாழ்வு. சினிமாவில் நடிக்க வேண்டும் என்று சொன்னால் நடிக்கிறேன். நடிக்க வேண்டாம் உனக்கு கொடுத்திருக்க வேலையைப் பார், அந்த சேவகம் செய் என்று சொன்னால் செய்கிறேன்.
நீ அதுக்கு லாயிக்கில்லை, வேறு ஆள் பார்த்துக் கொள்கிறோம் என்றால் நன்றி. அவருக்கு ஏதாவது உதவி செய்ய வேண்டுமா செய்கிறேன். இது மேடையில் உங்களை கைதட்ட வைப்பதற்காக சொல்லவில்லை. என் மனதின் ஆழத்திலிருந்து வரும் வார்த்தை.
எனக்கு வேண்டிய பணத்தை, சுகத்தை, வளத்தை நீங்கள் கொடுத்துவிட்டீர்கள். அதற்கான நன்றியைச் சொல்ல இந்த வாழ்க்கைப் போதாது. அதற்கு கைமாறாக எது செய்தாலும் போதாது. உங்கள் சேவையில் சாவது தான் இந்த நல்ல கலைஞனுக்கு நல்ல முடிவு
இவ்வாறு அவர் பேசினார்.