தமிழ் சினிமா

'தண்டட்டி' படப்பிடிப்புக்கு வீடு கொடுக்க மறுத்த கிராமத்தினர்

செய்திப்பிரிவு

சென்னை: பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் லக்ஷ்மன் குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் 'தண்டட்டி' . வெங்கடேஷ் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை ராம் சங்கையா இயக்கியுள்ளார். கதையின் நாயகனாக பசுபதி நடிக்கிறார். முக்கிய வேடங்களில் ரோகினி, விவேக் பிரசன்னா, அம்மு அபிராமி, தீபா, செம்மலர் அன்னம் உட்பட பலர் நடித்துள்ளனர். கே.எஸ். சுந்தரமூர்த்தி இசையமைத்துள்ளார். மகேஷ் முத்துசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். 23-ம் தேதி வெளியாகும் இதன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் நடந்தது. டிரைலரை நடிகர் பசுபதி வெளியிட தண்டட்டி அணிந்த பாட்டிகள் ஒன்று சேர்ந்து பெற்றுக்கொண்டனர்.

விழாவில் பசுபதி பேசும்போது கூறியதாவது: ‘சார்பட்டா பரம்பரை’ முடிந்ததும் இந்தக் கதை கேட்டேன். சிறப்பாக இருந்தது. எனக்கு எப்போதும் எனது பாட்டியின் தண்டட்டி மீது ஒரு காதல் இருந்தது. சிறுவயதில் அவர் அணிந்திருந்த தண்டட்டியை சுட்டு விடலாம் என பல நாட்கள் முயற்சி செய்தேன். முடியவில்லை. அவர் மறைவுக்கு பின்தான் கிடைத்தது. இந்த ஒன்றரை மாதப் படப்பிடிப்பு நாட்களில் பாட்டிகளின் அட்டகாசம் அதிகமாக இருந்தன. இந்த ஜானரில் இவ்வளவு எளிதாக சமீபத்தில் யாரும் கதை சொன்னது இல்லை. இந்தப் படத்தில் ரோகினியும் நானும் அதிகக் காட்சிகளில் நடித்திருந்தாலும் எங்கள் இருவருக்கும் பேசிக் கொள்ளும்படி வசனம் எதுவும் இல்லை. நல்ல படத்திற்கான எல்லா தகுதியும் இந்தப் படத்திற்கு இருக்கிறது.

இவ்வாறு பசுபதி கூறினார்.

இயக்குநர் ராம் சங்கையா பேசும்போது, “இந்தப் படத்திற்கு மம்மூட்டி அல்லது பசுபதி என இரண்டு பேரை மட்டுமே மனதில் வைத்திருந்தேன். மம்மூட்டியை பிடிக்க முடியவில்லை. எனக்கு பசுபதி கிடைத்து விட்டார். படத்திற்காக கிராமங்களில் சில வீடுகள் தேவைப்பட்டன. தொடர்புடையவர்களிடம் கதை சொல்லி வீடு கேட்போம். ஒரு வீட்டில் படப்பிடிப்பு நடத்தியபோது, அந்த வீட்டில் இருந்த பெண்ணுக்குத் திருமணம் ஏற்பாடு ஆகிவிட்டது. அதற்கடுத்து அங்கு நடந்த படப்பிடிப்பில் ஒப்பாரி காட்சியை படமாக்கினோம். கல்யாண வீட்டில் வந்து ஒப்பாரி வைக்கிறீர்களே என வீடு கொடுக்க மறுத்துவிட்டார்கள்" என்றார்.

SCROLL FOR NEXT