சென்னை: விக்ரம் பிரபு, வாணி போஜன் நடிக்கும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படம் வரும் 23ம் தேதி வெளியாக இருக்கிறது. அடுத்து ‘ரெய்டு’ படத்தில் நடித்து வரும் விக்ரம் பிரபு இப்போது புதிய படம் ஒன்றில் நடிக்கிறார். இன்னும் பெயரிடாத இந்தப் படத்தை, லெமன் லீஃப் கிரியேஷன் பிரைவேட் லிமிடெட் சார்பில் ஆர். கணேஷ் மூர்த்தி மற்றும் ஜி சவுந்தர்யா தயாரிக்கின்றனர். இதில் விக்ரம் பிரபுவுடன் ஈஷா ரெப்பா, மைக்கேல் தங்கதுரை உட்பட பலர் நடிக்கின்றனர். சற்குணம், சுசீந்திரன் ஆகியோரிடம் பணியாற்றிய ரமேஷ் ரவிச்சந்திரன் இயக்குகிறார்.
படம்பற்றி அவர் கூறும்போது, “இது சைக்கோ த்ரில்லர் கதையை கொண்ட படம். இதுபோன்ற கதைகளில் வந்த படங்களில் இருந்து இதன் திரைக்கதை வித்தியாசமானதாக இருக்கும். விக்ரம் பிரபு, போலீஸ் இன்ஸ்பெக்டராக வருகிறார். இந்த தோற்றத்துக்காக அவர் தன்னை மாற்றியிருக்கிறார். நாயகியும் போலீஸ் கேரக்டரில் வருகிறார். ஹீரோ ஒருவர் வில்லனாக நடிக்கிறார். அவர் யார் என்பது இப்போது சஸ்பென்ஸ். ஜிப்ரான் இசை அமைக்கிறார். ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார்” என்றார். இதன் படப்பிடிப்பு சென்னை காளிகாம்பாள் கோயிலில் பூஜையுடன் இன்று தொடங்குகிறது.
யோகி பாபு, லக்ஷ்மி மேனன் நடிக்கும் 'மலை' மற்றும் அசோக் செல்வன், சாந்தனு நடிக்கும் 'ப்ளூ ஸ்டார்' படங்களையும் லெமன் லீஃப் கிரியேஷன் நிறுவனம் தயாரித்து வருகிறது.