'சோலோ' வெளியீடு தொடர்பாக இயக்குநர் பிஜாய் நம்பியார் வருத்தம் தெரிவித்திருக்கிறார்.
பிஜாய் நம்பியார் இயக்கத்தில் துல்கர் சல்மான், ஸ்ருதி ஹரிஹரன், தன்ஷிகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'சோலோ'. அக்டோபர் 6-ம் தேதி வெளியீடாக இருந்தது.
ஆனால், தமிழக அரசின் கேளிக்கை வரி விதிப்பால் புதிய திரைப்படங்கள் வெளியீடு இல்லை என்று தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது. இதனால் 'சோலோ' அக்டோபர் 5-ம் தேதி வெளியாகியிருக்கிறது.
இது குறித்து இயக்குநர் பிஜாய் நம்பியார் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:
6-ம் தேதியிலிருந்து போராட்டம் நடக்கவிருப்பதால் 'சோலோ' தமிழ் பதிப்பின் வெளியீட்டை தடுக்க அதிக முயற்சிகள் மேற்கொண்டும் எங்களால் முடியவில்லை. மனமுடைந்து இதை சொல்கிறேன். முதலில் சர்வதேச பதிப்பை மட்டும் வெளியிடலாம் என்றே திட்டமிட்டிருந்தோம்.
இது எனக்கு, சக தயாரிப்பாளருக்கும் ஏற்க முடியாத ஒன்று. படத்தின் மீது எங்களுக்கிருக்கும் நம்பிக்கை அதிகம். எங்களுக்கு துணையாக இருந்து வரும் அனைவருக்கும் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். இந்த போராட்ட விரைவில் தீர்வு காண முடியும் என்று நம்பி பிரார்த்திப்போம்
இவ்வாறு பிஜாய் நம்பியார் தெரிவித்திருக்கிறார்.