தோனி தயாரிப்பில் ஹரிஷ் கல்யாண் நடிக்கும் ‘எல்ஜிஎம்’ படத்தின் டீசரை எம்.எஸ்.தோனி மற்றும் சாக்ஷி தோனி இணைந்து நாளை (ஜூன் 7) வெளியிடுகின்றனர்.
கிரிக்கெட்டைத் தாண்டி பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார் தோனி. அப்படி அவர் திரைத் துறையிலும் படங்களை தயாரிக்க முன்வந்துள்ளார். தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷியின் தயாரிப்பு நிறுவனமான தோனி என்டெர்டெயின்மென்ட் நிறுவனம், தமிழில் ஹரிஷ் கல்யாண் மற்றும் இவானா ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்கும் ‘எல்ஜிஎம்’ எனப்படும் ‘லெட்ஸ் கெட் மேரிட்’ என்ற படத்தை தயாரிப்பதாக அறிவித்தது.தோனிக்கும், சென்னை கிரிக்கெட் ரசிகர்களுக்கும் தனி பிணைப்பு உள்ளதால், தனது புரொடக்ஷனில் உருவாகும் முதல் படத்தை தமிழில் தயாரிக்க முடிவு செய்து, இந்த அறிவிப்பு வெளியானது.
அறிமுக இயக்குநர் ரமேஷ் இயக்கி வரும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று அண்மையில் முடிந்தது. இந்தப் படத்தில் நடிகை நதியா மற்றும் யோகி பாபு ஆகியோரும் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு விஸ்வஜித் என்ற மலையாள இசையமைப்பாளர் இசையமைக்கிறார். இந்நிலையில், இப்படத்தின் டீசர் நாளை (ஜூன்7) வெளியாகும் எனவும், இந்த டீசரை எம்.எஸ்.தோனி மற்றும் அவரது மனைவி சாக்ஷி தோனி இணைந்து வெளியிடுவார்கள் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.