சிவாஜி ஐயாவின் நடிப்பு மட்டுமே எங்களது நடிப்பை மேம்படுத்திக் கொண்டிருக்கிறது என்ற சிவாஜிகணேசன் மணிமண்டப திறப்பு விழாவில் கமல்ஹாசன் பேசினார்
நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு 2 கோடியே 80 லட்சம் ரூபாய் செலவில் தமிழக அரசு மணி மண்டபத்தை அமைத்துள்ளது. இதன் திறப்பு விழா இன்று(அக்டோபர் 1) காலை நடைபெற்றது.
துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைக்க பல்வேறு அமைச்சர்களும் கலந்து கொண்டனர். இதில் சிவாஜியின் குடும்பத்தினர், ரஜினி, கமல் மற்றும் திரையுலக பிரமுகர்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தி பேசினார்கள்.
இந்நிகழ்ச்சியில் கமல்ஹாசன் பேசியதாவது:
ஆசிய எல்லைகள் கடந்த உலக நடிகர் சிவாஜி ஐயா. ஒருவேளை சினிமாவில் நடிக்க வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும், சினிமா ரசிகனாக இருந்திருப்பேன். அப்போது இங்கு உள்ளே வர அனுமதி கிடைக்கவில்லை என்றாலும் வெளியே நின்று கொண்டிருந்திருப்பேன். இந்த விழாவுக்கு எப்படியிருந்தாலும், யார் தடுத்தாலும் வந்திருப்பேன்.
பிரபு பேசும் போது எத்தனை முதல்வர்கள் இந்த மரியாதை செய்ய முன்வந்தார்கள் என்பதை பெயர் பட்டியலிட்டுக் குறிப்பிட்டார். நான் அடுத்த கட்டத்துக்குப் போகிறேன். எத்தனை அரசுகள் வந்தாலும், இந்த கலைஞனை மதித்தே ஆகவேண்டும். மதிப்பார்கள் என்பது உறுதி. அதற்கு யாரையும் கெஞ்சியோ, கேட்டோ ஆக வேண்டியதில்லை. தன்னால் நடக்கும், ஏனென்றால் தமிழர்கள் நன்றி மறவாதவர்கள்.
கலை ரசிகனாக இவ்விழாவில் கலந்து கொண்டுள்ளேன். எத்தனையோ நடிகர்கள் சிவாஜி ஐயாவைப் போல பேசிப் பேசிப் பார்த்துத் தோற்றவர்கள். இன்றும் அவரைப் போல் நடிக்க வேண்டும் என்று முயன்று வருகிறோம். அது தான் எங்கள் நடிப்பை மேம்படுத்திக் கொண்டிருக்கிறது.
இவ்வாறு அவர் பேசினார்.