சென்னை: லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் ‘லியோ’ படத்தின் வெளிநாட்டு மற்றும் கேரளா திரையரங்க வெளியீட்டு விநியோக உரிமை பெரும் தொகைக்கு விற்பனையாகியுள்ளது.
லோகேஷ் கனகராஜுடன் ‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு நடிகர் விஜய் இரண்டாவது முறையாக இணைந்து ‘லியோ’ படத்தில் நடிக்கிறார். கிட்டத்தட்ட 14 வருடங்களுக்குப் பிறகு விஜய்யுடன் இணைந்து த்ரிஷா நடிக்கிறார். கவுதம் வாசுதேவ் மேனன், மன்சூர் அலிகான், அர்ஜுன், மிஷ்கின், பிரியா ஆனந்த், மன்சூர் அலிகான், சஞ்சய் தத் உட்பட பலர் இதில் நடிக்கின்றனர். மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். அனிருத் இசை அமைக்கிறார். செவன் ஸ்கிரீன் நிறுவனம் படத்தைத் தயாரிக்கிறது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
ரசிகர்கள் மத்தியில் இப்படத்துக்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ள நிலையில், 'லியோ' படத்தின் வெளிநாட்டு மற்றும் கேரளா திரையரங்க வெளியீட்டு விநியோக உரிமைகள் முறையே ரூ.60 கோடி மற்றும் ரூ.16 கோடிக்கு விற்பனையாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில், ஷங்கரின் '2.0' படத்தின் ப்ரீ-ரிலீஸ் வியாபாரத்தை முறியடித்து அதிக தொகைக்கு விற்பனையான தமிழ்ப் படம் என்ற சாதனையை 'லியோ' படைத்துள்ளது. தென்னிந்தியப் படங்களில் 'ஆர்ஆர்ஆர்' மற்றும் 'சலார்' ஆகிய படங்களுக்குப் பிறகு அதிக தொகைக்கு வாங்கப்பட்ட மூன்றாவது படம் இது.
'லியோ' படம் ரிலீஸுக்கு முன்பே ரூ.350 கோடி ரூபாய்க்கு மேல் ஈட்டியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இப்படம் வரும் அக்டோபர் மாதம் படம் திரைக்கு வரும் என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.