வீரனூர் கிராமத்தைச் சேர்ந்த சிறுவன் குமரனை (ஹிப் ஹாப் ஆதி), மின்னலின் சிறு கீற்று தாக்கி விடுகிறது. அவனை, சிங்கப்பூருக்கு அழைத்துச் செல்கிறார் அவன் அக்கா. குமரன் வளர வளர தனது கைகளிலிருந்து மின் சக்தி வெளிப்படுவதை அறிகிறான். பிறர் மூளையை ஒரு நிமிடம் கட்டுப்படுத்தும் ஆற்றலும் கிடைக்கிறது. இதற்கிடையில் தனது கிராமம் பேரழிவுக்கு உள்ளாவதுபோல் கனவு காணும் அவன், 16 ஆண்டுகள் கழித்துச் சொந்த ஊர் திரும்புகிறான். அங்கு தனியார் நிறுவனம் ஒன்று ‘லேசர் மின் தடம்’ அமைத்து வருவதும், அதற்குத் தடையாக இருக்கும் காவல் தெய்வமான வீரன் கோயிலை இடிக்க இருப்பதும் தெரியவருகிறது. தனக்கிருக்கும் சக்தியைக் கொண்டு அந்தச் சதியைக் குமரனால் முறியடிக்க முடிந்ததா, இல்லையா என்பது கதை.
சூப்பர் ஹீரோ என்பதே ‘தர்க்கத்தை மீறி’ நிற்கும் கதாபாத்திர வார்ப்பு. அதில் மேஜிக்குகள் மலிந்திருக்குமே தவிர, லாஜிக்குகள் இருக்காது. ஒரு கொங்கு மண்டல கிராமத்தைக் கதைக் களமாகத் தேர்ந்தெடுத்துள்ள இதில், சூப்பர் ஹீரோவின் கால்கள் தரையில் நடக்கின்றன. தனக்குக் கிடைத்திருக்கும் சக்தியின் எல்லை எவ்வளவு, அது அறிவியல் விதிகளுக்கு எவ்வாறு கட்டுப்படுகிறது என்பதை அறிந்துள்ள நாயகன், அதற்கேற்றவாறு, எதற்காக சூப்பர் ஹீரோவாக அவதாரம் எடுக்கிறான் என்பது திரைக்கதையின் பயணம். அதில், அறிவியலையும் இயற்கையையும் கச்சிதமாகப் பொருத்தி, ‘அசலான’ முயற்சியாகக் கவர்கிறது படம்.
நாயகியை (ஆதிரா ராஜ்) பெண் பார்க்க வரும் முதிர் கண்ணன் முருகானந்தம் படும் அவஸ்தைகள், நாயகனுக்கு கடைசிவரை தோள் கொடுக்கும் நண்பர்கள், பார்வைக் குறைபாட்டுடன் வரும் ஜான்சன் உருவாக்கும் திருப்பங்கள், அவர் தோட்டத்தின் குதிரை, பணத்துக்காக அலையும் தேநீர்கடை காளி வெங்கட், முனீஸ்காந்த் கூட்டணி எனத் துணைக் கதாபாத்திரங்கள் உருவாக்கும் தருணங்கள் திரைக்கதைக்குத் தேவையான பொழுதுபோக்குத் தன்மையை வாரித் தந்திருக்கின்றன.
இதே போன்று பல படங்களில் வினய்-யைப் பார்த்துவிட்டதால் முதன்மை வில்லனுக்கான போதாமை இருந்தும், அது பெரிய பாதிப்பை ஏற்படுத்தவில்லை. ஹிப்ஹாப் ஆதி, கதைக் களம், தனது கதாபாத்திரம் ஆகியவற்றின் தன்மை உணர்ந்து அளவாக நடித்திருக்கிறார். பின்னணி இசை, ஒளிப்பதிவு, கலை இயக்கம் ஆகிய அம்சங்கள் கொங்கு வட்டாரத்தை யதார்த்தமாகக் காட்சிக்குள் கொண்டு வருவதில் பெரும் பங்களித்திருக்கின்றன.
‘மரகத நாணயம்’ என்ற சிறந்த ஹாரர் த்ரில்லரை கொடுத்த ஏ.ஆர்.கே. சரவணன், சிறு தெய்வ வழிபாட்டின் பண்பாட்டு மரபை எடுத்துக் கூறி, ஊருக்காக வாழ்ந்தவர்கள் தெய்வமாக உறைவதும் அவர்கள் செய்த தியாகமும் உருவாக்கிச் சென்ற நம்பிக்கையும் எவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்ததாகத் தொடர்கின்றன என்பதை ‘கற்பனை’ வீரனின் பிளாஷ்பேக் வழியாகச் சித்தரித்தது சுவாரஸ்யம்.
வீரனால் சக்தி பெற்றதாகச் சித்தரிக்கப்படும் கதாநாயகன், மனித சக்தியையும் மனிதர்களின் ஒற்றுமையையும் நம்பும் யதார்த்த முரணோடு இருப்பதும், தன் எல்லை உணர்ந்து களமாடுவதும் இதை தமிழின் சூப்பர் ஹீரோ படமாக ஆக்கியிருக்கின்றன. இவன் தவிர்க்க முடியாத அசல் வீரன்!