தமிழ் சினிமா

ஹீரோவாக மீண்டும் நடிக்கிறார் குரு சோமசுந்தரம்

செய்திப்பிரிவு

சென்னை: ‘ஆரண்ய காண்டம்’ படம் மூலம் நடிகராக அறிமுகமானவர் குரு சோமசுந்தரம். தொடர்ந்து பல்வேறு படங்களில் குணசித்திர வேடங்களில் நடித்துள்ள அவர், ‘ஜோக்கர்’ படத்தில், கதையின் நாயகனாக நடித்தார். இப்போது அவர் நீலம் புரொடக்‌ஷன்ஸ் தயாரிக்கும் படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார். இதுபற்றி அவர் கூறியதாவது:

இப்போது புதிய படம் ஒன்றில் ஹீரோவாக நடித்திருக்கிறேன். தினகரன் இயக்கி இருக்கிறார். எனக்கு ஜோடியாக சஞ்சனா நடராஜன் நடித்துள்ளார். நல்ல மெசேஜ் உள்ள படம் இது. நடிப்பதற்கு அதிக வாய்ப்புள்ள கதையை கொண்ட படம். படப்பிடிப்பு முடிந்துவிட்டது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும். மலையாளத்தில் ஷங்கர் ராமகிருஷ்ணன் இயக்கத்தில் ஒரு படத்தில் நடித்துள்ளேன். பிறகு ஆஷா சரத்துடன் இணைந்து ‘இந்திரா’ என்ற படத்தில் நடித்திருக்கிறேன். இது, நடுத்தர வயதைத் தாண்டிய காதலைச் சொல்லும் படம். வினு இயக்கியுள்ளார். இதன் படப்பிடிப்பும் முடிந்துவிட்டது. மோகன்லால் இயக்கியுள்ள ‘பரோஸ்’ படத்தில் குணசித்திர வேடத்தில் நடித்துள்ளேன். ‘இந்தியன் 2’ படத்திலும் முக்கிய வேடத்தில் நடிக்கிறேன். அது பற்றி இப்போது பேச வாய்ப்பில்லை.

மலையாளத்தில், தமிழ் நடிகர்கள் பிசியாக இருப்பது பற்றி கேட்கிறார்கள். இப்போது மொழி என்பதைத் தாண்டி சினிமா சென்றுவிட்டது. மற்ற மொழி பார்வையாளர்களுக்காக அந்தந்த மொழி நடிகர்கள் தேவைப்படுவது தவிர்க்க முடியாததாகி விட்டது. இது கலைஞர்களுக்கு நல்லது. இவ்வாறு குரு சோமசுந்தரம் கூறினார்.

SCROLL FOR NEXT