யோகி பாபு, தெலுங்கு நடிகர் சத்யா முதன்மை பாத்திரங்களில் நடிக்கும் நகைச்சுவைப் படத்துக்கு ‘கோல்டன் பாக்கியம்’ என்று தலைப்பு வைத்துள்ளனர். பவன் பாசம்செட்டி இயக்கும் இப்படத்தில் ஜெயஸ்ரீ, அதிராஜ் கதாநாயகிகளாக நடிக்கின்றனர். வெண்ணிலா கிஷோர், ரோகிணி, தணிகலபரணி, சுனில் ரெட்டி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
பப்லு அஜு ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு பவன், நிதிஷ் ஜான் இசையமைக்கின்றனர். நாகார்ஜுனா ரெட்டி மற்றும் பவன் பாசம்செட்டி இணைந்து ட்ரீம் மூவி மேக்கர்ஸ், நயவாயு சித்ராலு ஆகிய நிறுவனங்களின் சார்பில் தயாரிக்கின்றனர்.
தமிழ், தெலுங்கில் உருவாகும் இப்படத்தின் டைட்டில் கிளிம்ப்ஸை படக்குழு வெளியிட்டுள்ளது. நகைச்சுவையான குறிப்புடன் தொடங்கும் இந்த கிளிம்ப்ஸில் யோகி பாபு மற்றும் சத்யாவின் அறிமுகமும் அதைத் தொடர்ந்து அவர்களின் கதையைப் பற்றி இயக்குநர் சொல்லும் சுவாரஸ்யமான விளக்கமும் இடம் பெறுகிறது. காதலுடன் க்ரைம் மற்றும் ஆக் ஷன் கலந்த கதையாக உருவாகும் இதன் கிளிம்ப்ஸ் வரவேற்பைப் பெற்று வருகிறது. இப்படம் இந்த ஆண்டுக்குள் வெளியாகும் என்று அறிவித்துள்ளனர்.