கீது மோகன்தாஸ் இயக்கத்தில் யஷ் கதாநாயகனாக நடித்துள்ள படம், ‘த டாக்ஸிக்’. இதில் கியாரா அத்வானி, நயன்தாரா, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா, ருக்மணி வசந்த் என பலர் நடித்துள்ளனர்.
கன்னடம், ஆங்கில மொழிகளில் உருவாகியுள்ள இந்தப் படம் இந்தி, தெலுங்கு, தமிழ், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் டப் செய்யப்பட்டு ஆக.26-ல் வெளியாக இருக்கிறது.
கேவிஎன் புரொடக் ஷன்ஸ் சார்பில் வெங்கட் நாராயணா, மான்ஸ்டர் மைண்ட் புரொடக் ஷன்ஸ் சார்பில் யஷ் தயாரித்துள்ள இந்தப் படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா பெங்களூருவில் நடைபெற்றது. கன்னட சூப்பர் ஸ்டார் சிவ ராஜ்குமார் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினார்.
விழாவில் நடிகர் யஷ் பேசியதாவது: இந்த திரைப்படத்தைக் கன்னடம், தமிழ், தெலுங்கு என்று தனித்தனியாகப் பார்க்க வேண்டிய தில்லை. இது ஓர் இந்திய திரைப்படம். இதில் அந்தந்த திரையுலகைச் சேர்ந்த திறமையான நடிகர்கள் ஒன்றாக இணைந்துள்ளனர்.
இத்தனை சிறந்த நடிகர்கள் ஒன்றாகச் சேரும்போது சில சங்கடங்கள் வரலாம். ஆனால் இதில் தங்கள் ஈகோவை ஒதுக்கி வைத்துவிட்டு, இந்திய சினிமாவை உலக அரங்குக்கு கொண்டு செல்ல வேண்டும் என்ற ஒரே நோக்கத்துக்காக இணைந்ததால் தான் இந்தப் படம் சாத்தியமானது.
இந்தப் படத்தை உருவாக்குவது மிகவும் கடினமான ஒன்று. இது ஒரு வித்தியாசமான முயற்சி. மிகவும் சவாலானது, இது ஒரு வணிக ரீதியான படம் அல்ல.
வாழ்க்கையில் ஒன்றைச் செய்ய விரும்பும்போது, எதுவும் உங்களைத் தடுக்கக்கூடாது என்று நம்புகிறேன். நம்மில் பலர், மோசமாகப் பேசுபவர்களையும், ‘உங்களால் இதைச் செய்ய முடியாது’ என்று சொல்பவர்களையும் பார்க்கிறோம். ஆனால், நான் அப்படி சொல்வதைக் கேட்பதில்லை.
யாராவது என்னிடம் ‘உங்களால் இதைச் செய்ய முடியாது’ என்று சொன்னால், அதை அவர்களின் முட்டாள்தனம் என்றே கருதுகிறேன். அதற்கான முயற்சியையும் நேரத்தையும் உழைப்பையும் செலுத்தும்போது, வாழ்க்கையில் எதையும் சாதிக்க முடியும்.
இப்படத்துக்காக 200 நாட்கள் உழைத்திருக்கிறோம். எங்கள் உழைப்பும் செலவழித்த ஒவ்வொரு ரூபாயும் படத்தில் தெரியும். இதில் நடித்த ஒவ்வொருவருக்கும் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். நயன்தாரா இதில் இணைந்தபோது, கால்ஷீட் தொடர்பான சிக்கல்கள் இருந்தன. இருந்தபோதும் அவர் படப்பிடிப்பை முழுமையாக முடித்துக்கொடுத்தார். அவர் தனது சிறந்த பங்களிப்பை வழங்கினார்.
இதுபோன்ற திரைப்படத்தைத் தேர்ந்தெடுத்து, அதில் அவர் வெளிப்படுத்தியுள்ள நடிப்புக்கு மிகுந்த துணிச்சலும் நேர்த்தியும் தேவை. அவர் உண்மையிலேயே ஒரு ‘லேடி சூப்பர் ஸ்டார்’தான். இந்த படத்துக்குப் பிறகு இதில் நடித்துள்ளவர்களின் அன்பும் மரியாதையும் இன்னும் பல மடங்கு உயரும். இவ்வாறு யஷ் கூறினார்.
நடிகை நயன்தாரா கூறும்போது, ‘‘யஷைப் போல கடினமாக உழைக்கும் ஒரு நடிகரை இதுவரை பார்த்ததே இல்லை. படப்பிடிப்புத் தளத்தில் ஒவ்வொரு நாளும் அவர் செயல்படும் விதத்தைக் கண்டு வியந்தேன்.
கேஜி எஃப் 2 படத்துக்குப் பிறகு புதிய படங்களை உடனடியாக ஒப்புக்கொள்ளாமல், ‘டாக்ஸிக்’ படத்தின் கதைக்களம், தயாரிப்புத் திட்டமிடல் மற்றும் கதாபாத்திர வடிவமைப்புக்காக மட்டுமே சுமார் நான்கரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தனது நேரத்தைச் செலவிட்டு உள்ளார் யஷ்.
ஒரு பிரம்மாண்ட வெற்றிக்குப் பிறகும் அவசரமின்றி, சரியான கதையைத் தேர்ந்தெடுத்து அதை உலகத் தரத்தில் கொண்டு வர அவர் எடுத்துக்கொண்ட கால அவகாசம் அவருடைய அர்ப்பணிப்பைக் காட்டுகிறது. அவரிடம் என்னைக் கவர்ந்த விஷயம் இது.
இந்த நீண்ட தயாரிப்புப் பயணத்தில் யாஷ் தனது குடும்பத்தினருடன் செலவிடும் நேரத்தைப் பெருமளவில் தியாகம் செய்துள்ளார்” என்றார். விழாவில், தயாரிப்பாளர் வெங்கட் நாராயணா, நடிகைகள் கியாரா அத்வானி, ஹூமா குரேஷி, தாரா சுதாரியா, இயக்குநர் கீது மோகன்தாஸ் ஆகியோர் பேசினர்.