பாலகிருஷ்ணா நடிப்பில் வெளியான ‘அகண்டா 2’ மெகா பட்ஜெட்டில் உருவாகி எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இதையடுத்து பாலகிருஷ்ணாவின் 111-வது படத்தை கோபிசந்த் மலினேனி இயக்குகிறார். இருவரும் ஏற்கெனவே ‘வீரசிம்ஹா ரெட்டி’ படத்தில் இணைந்திருந்தனர்.
வரலாற்றுப் பின்னணியில் உருவாகும் இப்படத்தில் பாலகிருஷ்ணா 2 வேடங்களில் நடிக்கிறார். அதில் ஒரு வேடம், அரசர் என்று கூறப்பட்டது. இதில், நயன்தாரா மகாராணியாக நடிக்க ஒப்பந்தமானார். அவருடைய முதல் தோற்றம் வெளியாகி வரவேற்பைப் பெற்றது. ‘சிம்ஹா’, ‘ஜெய் சிம்ஹா’, ‘ ராம ராஜ்ஜியம்’ ஆகிய படங்களுக்குப் பிறகு இதில் இருவரும் மீண்டும் இணைந்து நடிக்கின்றனர்.
இந்தப் படத்தை முதலில் ரூ.150 கோடி பட்ஜெட்டில் உருவாக்கத் திட்டமிட்டனர். ‘அகண்டா 2’ எதிர்பார்த்த வசூலை பெறாததால், பட்ஜெட்டை குறைத்துவிட்டதாகவும் இதனால், ரூ.10 கோடி சம்பளம் வாங்கிய நயன்தாரா மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக வேறு நடிகையை நாயகியாக ஒப்பந்தம் செய்ய திட்டமிட்டுள்ளதாகச் செய்திகள் வெளியாயின.
இந்நிலையில் “அது வதந்திதான், படத்தின் கதை தற்போதைய மார்க்கெட் நிலவரப்படி மாற்றியமைக்கப்பட்டுள்ளது. ஆனால், நயன்தாரா படத்தில் இருந்து நீக்கப்படவில்லை” என்று படக்குழு தரப்பில் கூறப்படுகிறது.