மோகன்லால் நடிப்பில் உருவாகி வரும் படம், ‘அதிமனோகரம்'. மீரா ஜாஸ்மின் கதாநாயகியாக நடிக்கிறார். தருண் மூர்த்தி இயக்கி வருகிறார். திரைக்கதையில் ஏற்பட்ட குழப்பம் காரணமாக இப்படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதாக இணையதளங்களில் செய்திகள் வெளியாயின.
இந்நிலையில் அதை இயக்குநர் தருண் மூர்த்தி மறுத்துள்ளார். இதுகுறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் விளக்கம் அளித்துள்ள தருண் மூர்த்தி, “அது முற்றிலும் பொய்யான தகவல். கடந்த 78 நாட்களாக தொடு புழாவில் படப்பிடிப்பை நடத்தி வருகிறோம்.
மழையும் வானிலை மாற்றங்களும் எங்களது சில திட்டங்களைப் பாதித்துள்ளன என்பது உண்மைதான். ஆனால், எங்கள் குழுவினர் ஒவ்வொரு சவாலையும் முறியடித்து, மிகுந்த உற்சாகத்துடனும் நேர்மறை எண்ணத்துடனும் படப்பிடிப்பைத் தொடர்ந்து வருகிறோம். தனிப்பட்ட விருப்பங்கள் அல்லது விளம்பரத்துக்காகச் சரிபார்க்கப்படாத தகவல்களை யாரும் பகிரவோ, பரப்பவோ வேண்டாம்” என்று அவர் கூறியுள்ளார்.