இந்தியில் ‘மெட்ராஸ் கபே’ மூலம் அறிமுகமான ராஷி கன்னா, தமிழ், தெலுங்கு, மலையாள மொழித் திரைப்படங்களிலும் நடித்து வருகிறார்.
தற்போது இயக்குநர்கள் ராஜ் மற்றும் டிகே உருவாக்கும் ‘ஃபார்ஸி 2’ வெப் தொடர், ரஜினியின் ‘தர்மன்’, அக் ஷய் குமார் ஜோடியாக காமெடி படம் என நடித்து வருகிறார். அவர் திரைத்துறைக்கு வந்து 13 ஆண்டுகள் ஆனதை ஒட்டி, தனக்கு ஆதரவாக இருந்த அனைத்து கலைஞர்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுபற்றி அவர் வெளியிட்டுள்ள பதிவில், “13 ஆண்டுகள் என்பது நீண்ட காலம். ஆனால், இந்தப் பணி ஒருபோதும் எனக்கு வாய்ப்பாக இல்லாமல், பெருமையாகவே தோன்றியதால், இந்த ஆண்டுகள் மிக வேகமாகக் கடந்துவிட்டன.
‘மெட்ராஸ் கஃபே’ படத்தைத் திரும்பிப் பார்க்கும்போது, நான் ஏன் இந்தத் துறைக்கு வந்தேன் என்பது நினைவுக்கு வருகிறது. எனக்கு முக்கியமான கதைகளைச் சொல்லும் வாய்ப்பை அந்தப் படம் கொடுத்தது. எனது பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் ஆதரவாக இருந்த அனைத்து சக கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு நன்றியுள்ளவளாக இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.