‘அனிமல்’படத்துக்குப் பிறகு, பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் ‘ஸ்பிரிட்’ படத்தை இயக்குகிறார், சந்தீப் ரெட்டி வங்கா. இதில் த்ரிப்தி திம்ரி நாயகியாக நடிக்கிறார். தென் கொரிய நடிகர், மா டாங்க் சியோக், பிரகாஷ் ராஜ், காஞ்சனா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
பிரபாஸின் 25-வது படமான இது காவல்துறை அதிகாரியைப் பற்றிய கதை என கூறப்படுகிறது. தெலுங்கு, தமிழ், இந்தி, கொரியா உள்பட 8 மொழிகளில் உருவாகும் இப்படத்தின் தொடக்க விழா ஹைதராபாத்தில் சில மாதங்களுக்கு முன் நடைபெற்றது.
இதில் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் பிரபல இந்தி நடிகர் விவேக் ஓபராய் நடிக்க இருக்கிறார். சந்தீப் ரெட்டி வங்கா இயக்கிய ‘அனிமல்' படத்தில் இந்தி நடிகர் பாபி தியோல் வில்லனாக நடித்திருந்தார். அதில் அவருடைய கேரக்டரும் பேசப்பட்டது.
இந்நிலையில் இதில் விவேக் ஓபராய் வில்லனாக நடிக்கிறார். அவர் இதுவரை தோன்றாத லுக்கில் வர இருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. விவேக் ஓபராய் தமிழில், அஜித்தின் ‘விவேகம்’ படத்திலும் நெகட்டிவ் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.