தென்னிந்திய சினிமா

ஆக் ஷன் காட்சி படப்பிடிப்பில் விபத்து: மருத்துவமனையில் விநாயகன் அனுமதி

செய்திப்பிரிவு

மலையாள நடிகர் விநாயகன், தமிழில் திமிரு, காளை, ஜெயிலர் உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இப்போது ஜெயிலர் 2 படத்தில் நடிக்கிறார். இவர் மம்மூட்டியுடன் நடித்து சமீபத்தில் வெளியான ‘களம் காவல்’ வரவேற்பைப் பெற்றது.

இதையடுத்து அவர் நடித்து வரும் படம், ‘ஆடு 3’. கடந்த 2015-ம் ஆண்டு வெளியான ‘ஆடு’ படத்தின் மூன்றாம் பாகம் இது. மிதுன் மானுவல் தாமஸ் இயக்கும் இப்படத்தில் விநாயகன் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார். ஜெயசூர்யா, விஜய் பாபு, சைஜு குருப், சன்னி வெய்ன், இந்திரன்ஸ் உள்பட பலர் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்பு திருச்செந்தூர் அருகே நடந்தது.

ஆக் ஷன் காட்சி படப்பிடிப்பின்போது எதிர்பாராதவிதமாக விநாயகனுக்குப் பலத்த காயம் ஏற்பட்டது. முதலுதவி சிகிச்சைக்குப் பிறகு கொச்சி சென்ற விநாயகனுக்கு அங்கு எம்.ஆர்.ஐ ஸ்கேன் எடுத்துப் பார்க்கப்பட்டது.

அப்போது அவருக்குக் கடுமையான தசை பாதிப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இதையடுத்து மருத்துவர்கள் அவரை இரண்டு வாரம் ஓய்வெடுக்க அறிவுறுத்தியுள்ளனர். அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

SCROLL FOR NEXT