தென்னிந்திய சினிமா

பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிரி பாபு காலமானார்

ப்ரியா

ஹைதராபாத்: பழம்பெரும் தெலுங்கு நடிகர் கிரி பாபு (83) உடல்நலக்குறைவு காரணமாக ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சனிக்கிழமை காலமானார். அவருக்கு வயது 83.

ஹைதராபாத் கொண்டாப்பூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

ஆந்திரப் பிரதேசத்தின் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள ரவினுதலா கிராமத்தில் பிறந்த கிரி பாபு, இளம் வயதிலிருந்தே நாடகக் கலையின் மீது கொண்ட ஆர்வத்தால் திரையுலகில் நுழைந்தார். 1973-ஆம் ஆண்டு வெளியான 'ஜகமே மாயா' திரைப்படத்தின் மூலம் நடிகராக அறிமுகமான இவர், கடந்த ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலான தனது திரைப்பயணத்தில் 600-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார்.

தொடக்கத்தில் கதாநாயகனாக நடித்தாலும், பின்னர் வில்லன், நகைச்சுவை மற்றும் குணச்சித்திர வேடங்களில் தனது தனித்துவமான வசன உச்சரிப்பாலும் நடிப்பாலும் தெலுங்கு சினிமாவின் தவிர்க்க முடியாத கலைஞராக உயர்ந்தார். என்.டி. ராமராவ், அக்கினேனி நாகேஸ்வர ராவ், கிருஷ்ணா, சிரஞ்சீவி, மோகன் பாபு மற்றும் நாகார்ஜுனா உள்ளிட்ட பல தலைமுறை முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார். 1977-ஆம் ஆண்டு வெளியான 'குருக்ஷேத்திரம்' படத்தில் துச்சாதனன் வேடத்தில் இவரது நடிப்பு பெரும் பாராட்டைப் பெற்றது.

பசிவாடி பிராணம், ஹலோ பிரதர், நின்னே பெல்லாடதா, சந்திரலேகா மற்றும் கம்யம், கீதா கோவிந்தம், ஜாதி ரத்னாலு ஆகிய படங்களிலும் தனது முத்திரையைப் பதித்துள்ளார். நடிப்பு மட்டுமின்றி ரணரங்கம், இந்திரஜித் உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கியும், சில படங்களைத் தயாரித்தும் உள்ளார்,

மறைந்த கிரி பாபுவுக்கு ரகு பாபு, போஸ் பாபு ஆகிய இரு மகன்களும் ஒரு மகளும் உள்ளனர். இவரது மூத்த மகன் ரகு பாபு தெலுங்குத் திரையுலகில் முன்னணி நகைச்சுவை நடிகராக உள்ளார். கிரி பாபுவின் மறைவுக்குத் தெலுங்கு திரையுலகினரும் ரசிகர்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Amazon.in: ஆன்லைன் ஷாப்பிங் - இலவச ஷிப்பிங் வசதி.

SCROLL FOR NEXT