பெங்களூரு: தென்னிந்திய சினிமாவின் பழம்பெரும் பாடகர் ஜமுனா ராணி காலமானார். அவருக்கு வயது 88.
ஆந்திர மாநிலத்தில் 1938-ம் ஆண்டு பிறந்த ஜமுனா ராணி தனது 7-வது வயதில் ‘தியாகய்யா’ என்ற தெலுங்கு படத்தின் மூலம் பாடகராக அறிமுகமானார். இவர் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் 6,000-க்கும் அதிகமான பாடல்களை பாடியிருக்கிறார்.
1952-ம் ஆண்டு வெளியான ‘கல்யாணி’ என்ற படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். குழந்தை போல் கொஞ்சும் குரலுக்கு சொந்தக்காரரான ஜமுனா ராணி, ‘கல்யாண வயசு கட்டான மனசு’, ‘செந்தமிழ் தேன்மொழியாள்’, ‘பாட்டொன்று கேட்டேன் பரவசமானேன்’, ‘குங்கும பூவே கொஞ்சும் புறாவே’, ‘காளை வயசு கட்டான சைசு’, ‘சின்னச் சின்ன சிட்டு’, ‘யாரடீ நீ மோகினி’ என பல சூப்பர் ஹிட் பாடல்களைப் பாடியுள்ளார்.
திரைத் துறையில் ஜிக்கி, பி.லீலா, எம்.எல்.வசந்தகுமாரி, எம்.எஸ்.ராஜேஸ்வரி, ஏ.பி.கோமளா போன்றோர் கோலோச்சிக் கொண்டிருந்த காலத்தில் அறிமுகமான ஜமுனா ராணி தனது தனித்துவமான குரல் வளத்தால் 1950, 60-களில் மிகவும் அறியப்பட்ட பாடகர்களில் ஒருவராக இருந்தார்.
1980-களிலும் சில பாடல்களை பாடியுள்ளார். இளையராஜா இசையில் கமல் ஹாசன் நடிப்பில் வெளியான ‘நாயகன்’ படத்தில் ‘நான் சிரித்தால் தீபாவளி’ எனற பாடலைப் பாடியுள்ளார்.
ஜமுனா ராணி பாடிய பாடல்கள் அந்தப் பொற்காலத்தின் சாட்சியாக திகழ்ந்து கொண்டிருக்கும். இவர் தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருதும், அண்ணா விருதும் பெற்றுள்ளார். இந்த நிலையில், உடல்நலக் குறைவு காரணமாக பெங்களூரிவில் இவரது உயிர் நேற்று பிரிந்தது.