விஷ்ணுவின் தீவிர பக்தனான பிரகலாதனின் கதையைச் சொன்ன ‘மகாவதார் நரசிம்மா’ என்ற அனிமேஷன் படம் கடந்த ஆண்டு ஜூலை 25-ல் வெளியாகி வசூல் அள்ளியது. ரூ.300 கோடிக்கும் அதிகமாக இப்படம் வசூலித்ததால், அனிமேஷனில் பக்தி படங்களை எடுப்பது அதிகரித்தது. பல நிறுவனங்கள் புதிய அனிமேஷன் படங்களை அறிவித்தன. அதில் ஒன்று ‘வாயுபுத்ரா’ திரைப்படம்.
ஹனுமனின் கதையைச் சொல்லும் அனிமேஷன் படமான இதைத் தெலுங்கு இயக்குநர் சந்து மொண்டேட்டி இயக்குவதாக அறிவிக்கப்பட்டது. வலிமையிலும் பக்தியிலும் அசைக்க முடியாத ஹனுமனின் வரலாறும் மலைகளையே நகர்த்திய அவருடைய பக்தியின் கதையும், அவரின் நம்பிக்கையும், தியாகமும் இந்தப் படத்தில் இடம்பெறும் என்றும் கூறப்பட்டது. இதை சித்தாரா என்டர்டெயின்மென்ட் சார்பில் நாக வம்சி, சாய் சவுஜன்யா, ஃபார்ச்சூன் ஃபோர் சினிமாஸ் இணைந்து தயாரித்தனர்.
தெலுங்கு, இந்தி, தமிழ், மலையாளம், கன்னட மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் இப்படம் நிறுத்தப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. கிராபிக்ஸ் உள்ளிட்ட தொழில்நுட்ப விஷயங்களுக்கு மட்டுமே சுமார் ரூ.38 கோடி செலவாகும் என்றும் மற்ற செலவுகளையும் கணக்கிட்டால் மொத்த பட்ஜெட் ரூ.50- 55 கோடிக்கும் மேல் வருவதால் இப்படத்தை நிறுத்தி வைத்துள்ளதாகக் கூறப்படுகிறது.