பிரபாஸ் நடித்த ‘த ராஜா சாப்’ திரைப்படம், தெலுங்கு, தமிழ், இந்தியில் ஜன. 9-ம் தேதி வெளியானது. இதில் மாளவிகா மோகனன், நிதி அகர்வால், ரித்தி குமார் என பலர் நடித்துள்ளனர்.
இந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. இப்படம் ஓடிடி-யில் வெளியான பிறகு சமூக ஊடகங்களில் ட்ரோலிங்கை எதிர்கொண்டு வருகிறது. அதில் சண்டைக் காட்சிகளில் டூப்களைப் பயன்படுத்தியதாக விமர்சனம் எழுந்தது. படத்தில் மாளவிகா மோகனன் போல உடையணிந்த ஸ்டன்ட் நடிகரின் புகைப்படம் வைரலானதால், அவரும் டூப்பை பயன்படுத்தியதாகக் கூறப்பட்டது.
இதற்கு பதிலளித்துள்ள மாளவிகா மோகனன், படத்தில் தனக்கான ஆக் ஷன் காட்சிகளை தானே செய்ததாகத் தெளிவுபடுத்தியுள்ளார். தொழில்முறை ஸ்டன்ட் கலைஞர்கள் ஒத்திகைக்காகவோ அல்லது ஆபத்தான காட்சிகளுக்காகவோ மட்டுமே இருக்கிறார்கள் என்று கூறியுள்ள அவர், கயிறு உதவியுடன் சண்டைக்காட்சிகளில் தான் ஈடுபட்ட வீடியோக்களை பகிர்ந்துள்ளார்.
அதில் அவர், “த ராஜா சாப் படத்தில் அனைத்து ஸ்டன்ட்களையும் நானே செய்தேன். நான் ஆக்ஷனை மிகவும் ரசிக்கிறேன். உடல் ரீதியாகக்கடும் சவாலை எதிர்கொள்வதும் புதிய விஷயங்களைக் கற்றுக்கொள்வதும் எனக்கு மகிழ்ச்சியைத் தருகிறது. ஹீரோக்கள் தாங்களாகவே ஆக்ஷன் காட்சிகளைச் செய்தாலும் படப்பிடிப்பு தளத்தில் எப்போதும் ஒரு டூப் இருப்பார் அவர்கள் நிபுணர்கள் என்பதால், நடிகர்களுடன் இறுதி ஷாட்டை எடுப்பதற்கு முன்பு, ஆக்ஷன் இயக்குநர் அவர்களுடன் ஒத்திகை பார்ப்பது வழக்கம். அல்லது சில ஷாட்கள் நடிகர்களால் செய்ய முடியாத அளவுக்கு ஆபத்தானவை என்று நினைக்கும் போது, அதை அவர்கள் செய்வார்கள்” என்று தெரிவித்துள்ளார்.