‘செல்வி’ படத்தின் காட்சி
சைலேஷ் ரத்னகுமார் இயக்கி இருக்கும்‘செல்வி’, ஷஷாங் வலியாவின் (Shashank Walia) ‘பேர்ட்ஸ் இன் தி டார்க்’ (Birds in the Dark) ஆகிய படங்கள், புசான் சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடுவதற்கு தேர்வாகி உள்ளன.
தென்கொரியாவின் புசான் நகாரில் ஆண்டுதோறும் நடக்கும் ‘புசான் சர்வதேச திரைப்பட விழா’, மிகப் பெரிய ஆசிய திரைப்பட விழாவாகும். 31-வது திரைப்பட விழா அக்டோபர் 6-ம் தேதி தொடங்குகிறது.
இந்த விழாவில் விஷன் - ஆசியா பிரிவில் திரையிடப்படுவதற்காக தமிழ்ப் படமான ‘செல்வி’யும், ‘பேர்ட்ஸ் இன் தி டார்க்’ படமும் தேர்வாகி உள்ளன.
ட்ரூ ஸ்டோரி பிலிம்ஸ் நிறுவனத்தின் கீழ் ரீமா கவுர்வுடன் ஹன்சல் மேத்தா மற்றும் ஷாகில் சைகல் ஆகியோர் இணைந்து, ‘பேர்ட்ஸ் இன் தி டார்க்’ படத்தை தயாரித்துள்ளனர்.
பஞ்சாபில் நடக்கும் ஒரு விவசாய போராட்டத்தின் பின்னணியில் நடக்கும் ‘பேர்ட்ஸ் இன் தி டார்க்’ படம், விரக்தியில் இருக்கும் ஒரு காவலருக்கும், வழக்கு ஒன்றில் குற்றம் சாட்டப்பட்ட ஒருவருக்கும் இடையில் உருவாகும் அன்பு மற்றும் மனிதாபிமான உறவு பற்றி கூறுகிறது.
தேசிய விருது பெற்ற நடிகையான அஞ்சலி பாட்டீல் நடித்து இருக்கும் ‘செல்வி’ படம் ‘ஹோம் - கேர்’ வேலை பார்க்கும் பெண்ணின் மறுபக்கத்தைப் பற்றி பேசுகிறது.
“செல்வி படம் ஒரு பெண்ணின் சராசரி நாளில் நடக்கும் நிகழ்வுகளைப் பற்றியது. ஒரு பெண்ணின் வாழ்வில் நடக்கும் விஷயங்களுக்கு எந்தவிதமான அர்த்தங்களையும் கற்பிக்காமல், உண்மைக்கு நெருக்கமாக அவளின் அன்றாட நிகழ்வுகளை பதிவுசெய்ய விரும்பினேன்” என்று படம் பற்றி அதன் இயக்குநர் ரத்னகுமார் தெரிவித்துள்ளார்.