‘ராஜா சாப்’ படத்தின் தோல்வியால், அதன் தயாரிப்பாளருக்கு மேலும் ஒரு படம் பண்ண முடிவு செய்திருக்கிறார் பிரபாஸ்.
மாருதி இயக்கத்தில் பிரபாஸ், சஞ்சய் தத், மாளவிகா மோகனன், நிதி அகர்வால் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் ‘தி ராஜா சாப்’. இதனை பீப்பீள் மீடியா பேக்டரி நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வெளியிட்டது. இப்படம் யாரும் எதிர்பாராத வகையில் படுதோல்வியை தழுவியது. இதன் காரணமாக தயாரிப்பாளருக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டது.
இப்பட வெளியீடுக்கு பின்பு, கடந்த வாரம் தயாரிப்பாளர் விஷ்வ பிரசாத்தை சந்தித்து பேசியிருக்கிறார் பிரபாஸ். அதில் ‘ராஜா சாப்’ படத்தின் தோல்விக்குப் பொறுப்பேற்று, அவரது தயாரிப்பு நிறுவனத்துக்கு மேலும் ஒரு படம் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் பிரபாஸ். இதன் மூலம் விஷ்வ பிரசாத் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
தற்போது நடித்து வரும் படங்களை முடித்துவிட்டு, பீப்பீள் மீடியா பேக்டரி நிறுவனம் தயாரிக்கும் படத்தினை தொடங்கவுள்ளார் பிரபாஸ். இதன் இயக்குநர் யார் என்பது இன்னும் முடிவாகவில்லை. பிரபாஸின் இந்த முடிவுக்கு தெலுங்கு திரையுலகினர் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.